போதைக்கு அடிமையான தனது இரண்டாவது மகனின் அடாவடியை சகிக்க முடியாத ஓய்வு பெற்ற அதிபரான தந்தை, உறக்கத்தில் இருந்த தனது மகனின் தலையில் கோடாரியால் தாக்கி கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
ரிதிகம கவிசிகமுவ உலுபாலவில் நேற்று (4) காலை இந்த சம்பவம் நடந்துள்ளதாக ரிதிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கம்புருலென அறநெறி பாடசாலையின் முன்னாள் அதிபரின் இரண்டாவது மகனான பராக்கிரம பண்டார ஜயலத் (27) என்பவரே படுக்கையிலிருந்த போது தந்தையினால் கோடரியால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர். அவரை போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபட வைக்க 18 இலட்சம் ரூபாவிற்கும் மேல் குடும்பத்தினர் செலவிட்டுள்ளனர்.
எனினும், மகன் போதைப்பழக்கத்திலிருந்து விடுபடவில்லை.
இதையடுத்து, அவரை தொழிலுக்காக டுபாய்க்கு அனுப்பியுளள்னர். டுபாயிலிருந்து அண்மையில் திரும்பி வந்த மகன், கொண்டு வந்த பணத்தை போதைப்பொருளுக்காக செலவழித்துள்ளார்.
கடந்த 20 நாட்களில் ரூ.80,000 பணத்தை தந்தையிடம் மிரட்டி பெற்று போதைப்பொருளுக்கு செலவழித்துள்ளார்.
இப்பாகமுவ பாடசாலையொன்றில் கல்வி பயின்ற காலத்தில் அவருக்கு காதல் உறவு ஏற்பட்டிருந்தது. அந்த காதலியை திருமணம் செய்ய முடிவெடுத்த மகன், 11ஆம் திகதி திருமணத்திற்கு திகதி குறிப்பிட்டிருந்தார்.
எனினும், குடும்பத்தினருக்கு திருமணத்தில் சம்மதம் இருக்கவில்லை.
தமது மகனை போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்திற்கு அழைத்து செல்ல பெற்றோர் திட்டமிட்டிருந்தனர். நேற்று முன்தினம் (3) அதற்காக திகதி குறிப்பிட்டிருந்தனர். எனினும், மகன் அதற்கு சம்மதிக்கவில்லை.
அத்துடன், மகன் 11ஆம் திகதி திருமணத்திற்கு திகதி குறித்திருந்தார்.
அத்துடன், தனது திருமண செலவிற்காக ஒரு தொகை பணத்தை தருமாறு பெற்றோரை மிரட்டியுள்ளார். பணத்தை உடனடியாக தருமாறு அவர் பல வழிகளில் மிரட்டியுள்ளார்.
இந்த மிரட்டல்களை பொறுக்க முடியாமல் தந்தை இந்த விபரீத முடிவை எடுத்தார்.



