நடப்பு ரி20 உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் ஹட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் அயர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் லிட்டில்.
நடப்பு தொடரில் இரண்டாவது முறையாக ஒரு பந்துவீச்சாளர் ஹட்ரிக் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல அயர்லாந்து அணி சார்பில் ரி20 உலகக் கோப்பையில் ஹட்ரிக் கைப்பற்றிய இரண்டாவது பந்துவீச்சாளராகவும் அவர் உள்ளார்.
அடிலெய்ட் மைதானத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கப்டன் வில்லியம்சன் அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அயர்லாந்து அணி விரட்டி வருகிறது.
முன்னதாக, இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 19வது ஓவரில் லிட்டில் அபாரமாக பந்து வீசி நியூஸிலாந்து அணியின் முக்கியமான வீரர்கள் வில்லியம்சன், நீஷம் மற்றும் சான்ட்னர் விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் கைப்பற்றி இருந்தார்.
4 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். கடந்த 2007 முதல் நடைபெற்று வரும் ரி20 உலகக் கோப்பை தொடரில் இதுவரை 6 பந்துவீச்சாளர்கள் ஹட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
பிரெட் லீ – அவுஸ்திரேலியா – 2007
கேம்பர் – அயர்லாந்து – 2021
வனிந்து ஹஸரங்க – இலங்கை – 2021
ரபாடா – தென்னாபிரிக்கா – 2021
கார்த்திக் மெய்யப்பன் – ஐக்கிய அரபு அமீரகம் – 2022
ஜோஷ் லிட்டில் – அயர்லாந்து – 2022




