வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப்பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது. அதேபோன்று, வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை நடுகைசெய்ய இயலுமெனினும் கார்த்திகைமாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும். கார்த்திகையில் மரங்களை நடுகைசெய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரமல்ல; அது தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் ஒரு தேசியச்செயற்பாடும் ஆகும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபையின் தீர்மானத்துக்கு அமைவாக 2014ஆம் ஆண்டுமுதல் கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடகஅறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையின் முழுவிபரம் வருமாறு;
பூமி சூடேறி வருவதால் காலநிலையில் படுபாதகமான மாற்றங்கள் ஏற்படத்தொடங்கியுள்ளன. கடும் வறட்சி, காலம்தப்பிய பெருமழை, வேகமெடுக்கும் சூறாவளிகள், கடல்மட்ட உயர்வு, உயிரினங்களின் அழிவு என்று காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் தற்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம். இதனால், வெப்பநிலை அதிகரிப்புக்குக் காரணமான கரியமிலவாயுவை உறிஞ்சி அகற்றுவதற்கு மரங்களின் நடுகையை ஒரு பேரியக்கமாக முன்னெடுக்கவேண்டிய கட்டாயநிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
மரநடுகையைப் பெருமளவில் மேற்கொள்வதற்கு கூடுதலான மழைவீழ்ச்சியைப் பெறும் கார்த்திகை மிகப்பொருத்தமான மாதமாகும். ஈழத்தமிழர்களின் வாழ்வியலிலும் கார்த்திகை மாதம் தனித்துவமான இன்னுமொரு சிறப்பினைக் கொண்டுள்ளது. இம்மாதத்திலேயே மண்ணுக்காக மரணித்த மறவர்களைக் கூட்டாக நினைவிற்கொள்ளும் நாள் அடங்குகிறது. மரவழிபாட்டைத் தமது தொல்வழிபாட்டு முறையாகக்கொண்ட தமிழர்கள், இறந்தவர்களின் நினைவாக மரங்களை நடுகைசெய்து, அவற்றை உயிருள்ள நினைவுச் சின்னங்களாகப் போற்றிய பண்பாட்டு மரபைக் கொண்டிருக்கின்றனர்.
தேசியம் என்பது வெறுமனே தட்டையான ஒர் அரசியற் சொல்லாடல் அல்ல. இது ஒரு இனத்தின் வாழ்புலம், மொழி, வரலாறு, பண்பாடு, மத நம்பிக்கைகள் ஆகிய கூறுகளின் திரட்சியான ஒரு வாழ்க்கை முறையாகும்.
அந்த வகையில், கார்த்திகைமாத மரநடுகை என்பது தமிழ்த்தேசிய நோக்கிலும் மிகவும் பொருத்தப்பாடான ஒன்றாகும். எனவே தமிழ்மக்கள் கார்த்திகை மரநடுகையை ஒரு சூழல்பேண் நடவடிக்கையாக மாத்திரமல்லாது உணர்வெழுச்சியுடன்கூடிய ஒரு தமிழ்த்தேசியச் செயற்பாடாகவும் கொண்டாட வேண்டியது அவசியமாகும்.
வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப்பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது. அதேபோன்று, வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை நடுகைசெய்ய இயலுமெனினும் கார்த்திகைமாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும்.
கார்த்திகையில் மரங்களை நடுகைசெய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரமல்ல; அது தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் ஒரு தேசியச்செயற்பாடும் ஆகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.