கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் 4,900 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
11 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 19,845 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையுடன் தொடர்புடைய மூன்று மரணங்கள் மற்றும் இரண்டு நபர்களுக்கு காயங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், கடும் மழை, பலத்த காற்று மற்றும் நிலச்சரிவு காரணமாக 8 வீடுகள் அழிந்துள்ளதாகவும், 329 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட சுமார் 143 குடும்பங்களும் தற்போது தற்காலிக தங்குமிடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இதேவேளை, நேற்றைய தினத்தை விட இன்றும் நாளையும் மழையுடனான காலநிலை சற்று அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.
பிற்பகல் அல்லது இரவு வேளையில் நாட்டின் மற்ற இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் தென் மாகாணத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.