ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 7வது முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளது.
20வது ஓவர் 8வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பங்களாதேசில் உள்ள சில்ஹெட் நகரில் கடந்த 1ஆம் திகதி தொடங்கியது. 7 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் நடப்பு சம்பியன் பங்களததேஸ், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதியில் தோற்றன. இந்த நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 6 முறை சம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய இலங்கை 4வது ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து வெறும் 9 ரன்களை மட்டுமே சேர்ந்திருந்தது. தொடர்ந்து பந்துவீச்சில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்தது.
இந்திய வீராங்கனை ரேனுகா சிங் 3 ஓவர் வீசி 5 ரன்களை விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் செஃபாலி வெர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஸ்மிருதி மந்தானா அதிரடியாக ஆடி, 25 பந்துகளில் 51 ரன்களை விளாசினார். இறுதியில் 8.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் இந்திய அணி 7வது முறையாக ஆசிய கோப்பை போட்டியில் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.




