ஒக்டோபர் 8ஆம் திகதி ரயில் தாமதமானது தொடர்பான முறைப்பாடு தொடர்பான விசாரணையை நாசவேலைகள் காணப்படுவதால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஒப்படைத்துள்ளார்.
கொழும்பு கோட்டையிலிருந்து அநுராதபுரம் வரை புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சொகுசு ரயிலின் கன்னிப் பயணத்தின் தாமதம் மற்றும் தடம் புரண்டது நாசகார நடவடிக்கையாக இருக்குமா என ஆராயுமாறு போக்குவரத்து அமைச்சு விடுத்த கோரிக்கையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ரஞ்சித் பேமசிறி பொலிஸ் மா அதிபரிடம் விடுத்த எழுத்துமூலக் கோரிக்கையின் பிரகாரம் விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அநுராதபுரம் செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இந்த சொகுசு ரயில் தனது முதல் பயணத்தை ஒக்டோபர் 8ஆம் திகதி தொடங்கியது.
அன்று காலை ஏராளமான பயணிகள் இந்த கன்னிப் பயணத்தில் இணைந்ததால் ரயில் சரியான நேரத்தில் ஓடவில்லை. சிக்னல் கோளாறு காரணமாக பயணம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமானது என்பது பின்னர் தெரியவந்தது.
களனி பகுதியில் புகையிரத சமிக்ஞை கேபிளை யாரோ வெட்டியதால் ஏற்பட்ட சமிக்ஞை பிழை காரணமாக தாமதம் ஏற்பட்டதாக ரயில்வே திணைக்களம் பின்னர் தெரிவித்தது.
மேலும், தம்புத்தேகமவில் மற்றுமொரு புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக மேலும் தாமதமானது.
போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன வழங்கிய பணிப்புரையின் பிரகாரம், அமைச்சின் செயலாளர் இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார்.