பாகிஸ்தானில் பெய்யும் கனமழையால் அந்த நாட்டின் மூன்றில் ஒருபகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதுவரை 1,200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 2,000 பேரை இராணுவம் மீட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியது. அந்த நாட்டின் சிந்து, பஞ்சாப், பலுசிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாணங்களிலும் கடந்த 3 மாதங்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. பாகிஸ்தானின் மிகப்பெரிய நதியான சிந்து நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
அந்த நாட்டின் மூன்றில் ஒரு பகுதி முழுமையாக வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதுவரை 1,200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 7 இலட்சம் கால்நடைகள் மடிந்துள்ளன. 3.3 கோடிக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்பான தொற்று நோய்கள் அதிவேகமாக பரவி வருகின்றன. சுமார் 20 இலட்சம் ஏக்கர் பயிர்கள் நாசமாகி உள்ளன. 5,000 கி.மீ. தொலைவு சாலைகள் சேதமடைந்து துண்டிக்கப்பட்டுள்ளன. 250 க்கும் மேற்பட்ட பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன.
பாகிஸ்தான் இராணுவ வீரர்கள்வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 4 மாகாணங்களிலும் 10,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் இரவு, பகலாக பணியாற்றி பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகின்றனர். இதுகுறித்துஇ ராணுவ தலைமை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த ஜூன் மாதம் முதல் மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை வெள்ளத்தில் சிக்கித் தவித்த 50,000 பேரை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளோம். இதில் 1,000 பேர் ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 2,000 பேரை மீட்டு உள்ளோம். செப்டம்பர் வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்திருப்பதால் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறோம். நிவாரண முகாம்களில் இராணுவ மருத்துவர்கள் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர் என இராணுவ தலைமை தெரிவித்துள்ளது.
பருவநிலை மாறுபாடு
பாகிஸ்தானின் காம்சாட்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி அக்தர்ஹுசைன் கூறும்போது, “பருவநிலை மாறுபாடு காரணமாக பாகிஸ்தானில் வரலாறு காணாத மழைபெய்து வருகிறது. இமயமலையின் பனிச்சிகரங்கள் உருகி சிந்து நதியில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இது பேரழிவுக்கு வித்திட்டிருக்கிறது. இதை தடுக்கபுவி வெப்பநிலையை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் வரும் காலத்தில் இமய மலையின் பனிச்சிகரங்கள் உருகி இந்த பிராந்தியத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார்.