அரச உத்தியோகத்தர்களை ஐந்து வேலை நாட்களிலும் பணிக்கு அழைப்பது தொடர்பில் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வேலைக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, ஜூலை 24 முதல் ஒரு மாத காலத்திற்கு பணிக்கு சமூகமளிக்கும் அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் சுற்றறிக்கையை அமைச்சு வெளியிட்டிருந்தது.
எவ்வாறாயினும், எரிபொருள் தட்டுப்பாடு ஓரளவுக்கு நிவர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், சேவைகளைப் பெறுவதற்காக அரசாங்க அலுவலகங்களுக்குச் செல்லும் நபர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகின்றது.
இதனைக் கருத்தில் கொண்டு, அரச அலுவலகங்களின் சேவைகள் வழமை போன்று மேற்கொள்ளப்பட வேண்டுமென அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, சுற்றறிக்கை காலாவதியானதுடன், ஐந்து வேலை நாட்களிலும் அரச உத்தியோகத்தர்களை மீண்டும் பணிக்கு அழைப்பது தொடர்பில் தீர்மானம் எட்டப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.




