ஹிஸ்புல்லா தளபதிகளின் பெயரில் போலி சாரதி அனுமதி பத்திரம்; ஈரானிய ஆட்சியை ஆதரிப்பவர்: சல்மான் ருஷ்டியை தாக்கியவரின் பின்னணி!

Date:

நாவலாசிரியர் சல்மான் ருஷ்டியைக் கொல்ல முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 24 வயதான ஹாடி மாதர்  ‘பக்தியுள்ள முஸ்லீம்’ என்றும், ஈரானின் கடும்போக்கு ஆட்சியை ஆதரிப்பவர் என்றும் அமெரிக்க விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹாடி மாதர், கொலை முயற்சி மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகளிற்காக நேற்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது இரண்டாம் நிலை கொலை முயற்சி, தாக்குதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சல்மானின் நிலை இன்னும் மோசமடைந்தால் ஹாடி மீதான குற்றச்சாட்டும் இன்னும் மேம்படுத்தப்படும்.

நியூயோர்க் மாநிலத்தில் நடந்த ஒரு இலக்கிய நிகழ்வில் சல்மான் ருஷ்டி15 முறை கத்தியால் குத்தப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு சுருக்கமான விசாரணையைத் தொடர்ந்து அவர் காவலில் வைக்கப்பட்டார்.

சல்மான் ருஷ்டி (75) மீது வெள்ளிக்கிழமை காலை நடத்தப்பட்ட மிருகத்தனமான கத்திக் குத்து தாக்குதலில் கல்லீரல் சேதமடைந்து, கையில் நரம்புகள் துண்டிக்கப்பட்டதால் மருத்துவமனையில் வென்டிலேட்டரின் ஆதரவுடன் சிகிச்சை பெற்று வருகிறார் இருக்கிறார். அவர் ஒரு கண்ணை இழக்க வாய்ப்புள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். தற்போது அவர் பேசும் நிலைமையில் இல்லை.

சௌதாகுவா நிறுவனத்தில் சல்மான் ருஷ்டி இலக்கிய விரிவுரை செய்யவிருந்தபோது முகமூடி அணிந்த நபர்மேடைக்குள் புகுந்து அவரைத் தாக்கினார்.

பங்கேற்பாளர்களில் ஒருவரால் பகிரப்பட்ட மூன்று நிமிட வீடியோ கிளிப்பில், ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட பல பார்வையாளர்கள் மேடைக்கு விரைந்து வந்து சல்மானை தாக்கியவரை மடக்கிப் பிடிக்க முடிவதையும், மக்கள் அலறுவதையும் கேட்க முடிந்தது.

கைதான தாக்குதலாளி  குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். வெள்ளிக்கிழமை தாக்குதலுக்குப் பிறகு ஜேம்ஸ்டவுனில் உள்ள நியூயோர்க் மாநில காவல்நிலையத்தில் இருந்து மாற்றப்பட்ட பின்னர் ஜாமீன் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுவரை 14 புத்தகங்களை எழுதியுள்ள சல்மான ருஷ்டி, புக்கர் பரிசு உள்ளிட்ட உயரிய விருதுகளை வென்றுள்ளார். 2016ஆம் ஆண்டில் அவருக்கு அமெரிக்க அரசு குடியுரிமை வழங்கியது.முஸ்லிமாக பிறந்து நாத்திகராக வாழ்ந்து வரும் அவர், 1988ஆம் ஆண்டு சாத்தானின் கவிதைகள் என்ற நூலை வெளியிட்டார்.

இந்த நூலுக்கு பல முஸ்லிம் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்தன. 1989 இல் ஈரானின் இஸ்லாமியப் புரட்சியின் தலைவரான மறைந்த அயதுல்லா கொமெய்னி,  சல்மானின் மரணத்திற்கு அழைப்பு விடுத்து ஃபத்வாவை வெளியிட்டதிலிருந்து சல்மானின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் ஷியா தீவிரவாதத்திற்கு மாதர் ‘அனுதாபம்’ கொண்டிருந்தார் என்பதை ஆரம்ப சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன விசாரணை அதிகாரிகளை மேற்கோளிட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதாகவும், உலகம் முழுவதும் தீவிரவாதத்தை பரப்புவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தாக்குதலாளி ஹாடி மாதர் லெபனான் பின்னணியுடையவர். ஈரானிய ஆதரவு பயங்கரவாதக் குழுவான ஹிஸ்புல்லாவின் கோட்டையான யாரோன் என்ற தெற்கு எல்லை நகரத்திலிருந்து குடிபெயர்ந்த லெபனான் பெற்றோருக்கு அமெரிக்காவில் பிறந்தவர் மாதர். அவர் பிறந்ததிலிருந்து ஒருமுறை கூட லெபனான் சென்றதில்லை.

ஹிஸ்புல்லா அதிகாரி ஒருவர், மாதரின் தாக்குதல் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

மாதரின் தாயை மணந்த ஃபுவாட் கோமையா, தனது முன்னாள் வளர்ப்பு மகனைப் பற்றிய செய்தியைச் சொன்னபோது அழுதார், மேலும் அவரது அரசியல் அனுதாபங்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக நியூஜெர்சியில் உள்ள ஃபேர்வியூவில் உள்ள ஒரு ஸ்மார்ட் தனி வீட்டில் தனது தாய் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வசித்து வந்ததாக நம்பப்படும் ஹாடி மாதர், பெரும்பாலும் தனிமையில் இருப்பவர் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

“அவர்கள் ஒரு சாதாரண, மிகவும் நல்ல, மிகவும் அமெரிக்க குடும்பம்,” ஒரு பக்கத்து வீட்டுக்காரர் கூறினார்.

24 வயதான ஹாடி மாதரிடம் கண்டுபிடிக்கப்பட்ட போலி ஓட்டுநர் உரிமத்தில் ஹசன் முக்னியா என்ற பெயர் இருந்தது. முதல் மற்றும் இரண்டாவது பெயர்கள் இரண்டும் பயங்கரவாத அமைப்பு ஹிஸ்புல்லாவுடன் தொடர்புடையவை.  அந்த அமைப்பின் தற்போதைய தலைவரின் பெயர் ஹசன் நஸ்ரல்லா. அந்த அமைப்பின் பயங்கரமான தளபதிகளில் ஒருவரான இமாத் முக்னியா 2008 இல் சிரியாவில் சிஐஏ நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஹாடி மாதரிடம் மற்றும் ஈரானிய புரட்சிகர காவல்படை இடையே “உறுதியான தொடர்புகள்” இல்லை என்று விசாரணையாளர்கள் தெரிவித்தனர். அந்த சித்தாந்தத்தில் அனுதாபம் கொண்டிருந்தார். ஆனால் ஹாடி மாதருக்கு சொந்தமான ஒரு செல்போன் செய்தியிடல் செயலியில் கொல்லப்பட்ட ஈரானிய புரட்சிகர காவல்படை தளபதி காசிம் சுலைமானி மற்றும் “ஈரான் ஆட்சிக்கு அனுதாபம் கொண்ட ஒரு ஈராக் தீவிரவாதியின் படங்கள் உள்ளன என்று NBC நியூஸ் தெரிவித்துள்ளது. .

சல்மான ருஷ்டி

75 வயதான அவர் இந்தியாவில் பிறந்தார். அவரது எழுத்து பெரும்பாலும் மேற்கத்திய மற்றும் கிழக்கு நாகரிகங்களுக்கு இடையிலான தொடர்புகள் மற்றும் இடம்பெயர்வுகளின் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது.

முகமது நபியையும் குரானையும் அவமதித்ததாகக் கூறப்படும் சாத்தானிக் கவிதைகள் என்ற புத்தகத்தில் எழுதியதற்காக ருஷ்டிக்கு இதற்கு முன்பு கொலை மிரட்டல்கள் வந்தன.

சாத்தானின் கவிதைகளை தொடர்ந்து 1988 இல் பிரிட்டனில் ஒரு கலாச்சாரப் போர் வெடித்தது – இங்கிலாந்தில் புத்தக எரிப்புகளுடன் போராட்டங்கள் நடந்தன. இந்தியாவிலும் போராட்டங்கள் நடந்து, புத்தகங்களும், சல்மானின் உருவங்களும் எரிக்கப்பட்டன.

பாகிஸ்தான் புத்தகத்தை தடைசெய்தது, மேலும் பெப்ரவரி 1989 இல் ஈரானின் அயதுல்லா கொமேனியால் ஒரு ஃபத்வா – மரண தண்டனை – வழங்கப்பட்டது.

ருஷ்டி மற்றும் அவரது வெளியீட்டாளர்களின் மரணத்திற்கு கோமெய்னி அழைப்பு விடுத்தார், மேலும் முஸ்லிம்கள் தங்களால் இயலாவிட்டால் அவரைக் கொல்லக்கூடியவர்களுக்கு அவரைச் சுட்டிக்காட்டுமாறு அழைப்பு விடுத்தார்.

ஃபத்வா, அல்லது ‘ஆன்மீக கருத்து’, பிரிட்டனில் புத்தக எரிப்பு அலை மற்றும் முஸ்லிம் உலகம் முழுவதும் கலவரத்தைத் தொடர்ந்து 60 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

ருஷ்டி 1989 முதல் 2002 வரை 24 மணிநேர பாதுகாப்பில் வைக்கப்பட்டார். 2012 இல், ஒரு அரை-அதிகாரப்பூர்வ ஈரானிய மத அறக்கட்டளை ருஷ்டியின் தலைக்கான பரிசுத்தொகையை 2.8 மில்லியனில் இருந்து 3.3 மில்லியன் டொலராக உயர்த்தியது..

அவர் போலீஸ் பாதுகாப்போடு ஒரு தசாப்த காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

புத்தகத்துடன் தொடர்புடைய மற்றவர்கள் பல ஆண்டுகளாக தாக்கப்பட்டனர். சாத்தானின் கவிதைகளை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்த ஹிட்டோஷி இகராஷி, அவர் இலக்கியம் கற்பித்த வளாகத்தில் கத்தியால் குத்தப்பட்டார்.

புத்தகத்தின் இத்தாலிய மொழிபெயர்ப்பாளரான எட்டோர் கேப்ரியோலோ மிலனில் உள்ள அவரது குடியிருப்பில் கத்தியால் குத்தப்பட்டார்.

நாவலின் நோர்வே வெளியீட்டாளர் வில்லியம் நைகார்ட், அவரது வீட்டிற்கு வெளியே மூன்று முறை சுடப்பட்டுள்ளார். பின்னர் அக்டோபர் 1993 இல் காலமானார்.

துருக்கியில், புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் அஜீஸ் நெசினை இலக்கு வைத்து ஹோட்டலுக்கு தீவைத்ததில் 37 பேர் கொல்லப்பட்டனர்.

1998 இல் ஈரானின் சீர்திருத்தவாத ஜனாதிபதி ஃபத்வாவை தளர்த்தி, ருஷ்டியைக் கண்டுபிடித்து அவரைக் கொல்லும் எண்ணம் இல்லை என்று கூறினார்.

சல்மான் ருஷ்டி 4 திருமணங்கள் செய்துள்ளார்.

 

spot_imgspot_img

More like this
Related

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் டெஸ்டில் இருந்து ஓய்வுபெறுகிறார்!

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் 2027 பெப்ரவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...

இலங்கைக்கு தப்பிவந்த 5 தேடப்படுபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தல்

சீன அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த ஐந்து சீனப் பிரஜைகள், இலங்கையின் பல்வேறு...

திருப்பரங்குன்றம் கல்த்தூணில் தீபம் ஏற்றப்பட்டது

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்த்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்