தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு உடனடியாக நிரந்தர உரிமைப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போதைய பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட கொள்கைப் பிரகடனத்திலும் அரச அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு வீட்டு உரிமை வழங்குவது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதால், அதற்கான பத்திரங்களை உடனடியாக வழங்குமாறு அமைச்சர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலின் போதே அமைச்சர் ரணதுங்க இந்த பணிப்புரைகளை வழங்கினார்.
பூர்த்தி செய்யப்பட்ட ஆனால் இதுவரை வழங்கப்படாத உரிமைப்பத்திரங்களை விரைவில் பயனாளிகளின் குடும்பங்களுக்கு வழங்குமாறும், இதுவரை தயாரிக்கப்படாத உறுதிப் பத்திரங்களுக்கான பணிகளை துரிதப்படுத்துமாறும் அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த ஆண்டில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை சட்டத் துறைக்கு உரிமைப் பத்திரங்கள் தொடர்பான மொத்தம் 2,033 கோப்புகள் கிடைத்துள்ளன.
1,996 கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், 1,035 உரிமைப் பத்திரங்களுக்கான பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பயனாளிகளுக்கு ஏற்கனவே 822 உரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 961 உரிமைப்பத்திரங்கள் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.