அமெரிக்க டென்னிஸ் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் செவ்வாய்க்கிழமை ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க ஓபனில் விளையாடிய பின்னர் ஓய்வுபெறுவதாக தெரிவித்துள்ளார்.
வில்லியம்ஸ் சில மாத ஓயவின் பின் இந்த ஆண்டின் தொடக்கத்தில் விம்பிள்டன் போட்டிகளில் ஆடினார். ஆனால் அவர் முதல் சுற்றில் பிரான்சின் ஹார்மனி டானிடம் தோற்றார். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஆட்டத்தில் 7-5 1-6 7-6(7) என்ற கணக்கில் ஹார்மனி வெற்றி பெற்றார். செரீனாவின் வழக்கமாக ஆக்ரோச ஆட்டத்தை பார்த்தவர்களிற்கு, இந்த ஆட்டம் ஏமாற்றமளித்திருக்கும்.
செரீனா வில்லியம்ஸ் இதுவரை 23 ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். மகளிர் பிரிவில் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றதே சாதனையாக உள்ளது. அமெரிக்க ஓபனில் செரீனா பட்டம் வென்றால், அந்த சாதனையை சமன் செய்வார்.
‘ஓய்வு’ என்ற வார்த்தையை எனக்கு ஒருபோதும் பிடிக்கவில்லை, ஆனால் அது ஒரு உணர்ச்சிகரமான வார்த்தை என்பதையும், எனது ரசிகர்களுக்கும் டென்னிஸ் சகோதரத்துவத்திற்கும் மிகவும் முக்கியமான ஒன்று என்பதையும் அறிந்திருக்கிறேன்“ என தெரிவித்துள்ளார்.
செரீனா வில்லியம்ஸ் விம்பிள்டன் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான பெண் டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவர். ஏழு விம்பிள்டன் பட்டங்களைப் பெற்றுள்ளார். அவர் தனது முதல் விம்பிள்டன் பட்டத்தை 2002 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் சகோதரி வீனஸ் வில்லியம்ஸை தோற்கடித்து வென்றார். பின்னர் 2003ல் மீண்டும் கோப்பையை கைப்பற்றினார். 2009, 2010, 2012, 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் தனது அடுத்த ஐந்து பட்டங்களை வென்றார்.