தைவானை சுற்றியுள்ள கடற்பரப்புகளில் தீவிர இராணுவப் பயிற்சி நடத்தி வரும் சீனா, அங்கு ஏவுகணைகளையும் வீசி வருவது பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தனது ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக தைவானுக்கு செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்கு பிறகு தைவானுக்குச் சென்ற அமெரிக்க உயர் அதிகாரி என்ற பெருமையை நான்சி பெலோசி பெற்றார். நான்சியின் இப்பயணத்துக்கு சீனா கடும் அதிருப்தியை தெரிவித்தது. சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறது என்றும் சீனா தெரிவித்தது.
நான்சியின் வருகை காரணமாக ஞாயிற்றுக்கிழமை வரை தைவானைச் சுற்றி நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சிகள் உட்பட முக்கிய இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என சீனா அறிவித்திருக்கிறது. இதனால், தைவான் தீவைச் சுற்றி பதற்ற நிலை நிலவுகிறது.
இந்தச் சூழலில் தைவானின் கடற்பரப்புகளில் இராணுவப் பயிற்சிகளை நடத்தி வரும் சீன இராணுவம், தைவான் கடற்பரப்பில் ஏவுகணைகளை வீசி பயிற்சியில் ஈடுபட்டு வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டோங்ஃபெங் என்ற வகையைச் சேர்ந்த ஏவுகணைகளை சீனா, தைவானின் கடல் பரப்பில் வீசுவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று தைவானின் மாட்சு தீவுகளுக்கு அருகில் இருந்து சீன இராணுவம் ஏவுகணைகளை ஏவியது என்பதை தைவான் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களையும் அது நிலைநிறுத்தியுள்ளது.
The #Chinese Army has begun its large-scale military exercise in six waters around #Taiwan. The exercise will take place from August 4 to 7. pic.twitter.com/UC88sxkoHe
— Pagetamil (@Pagetamil) August 4, 2022
தைவானின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரைகளுக்கு அருகே மொத்தம் 11 டாங்ஃபெங் பாலிஸ்டிக் ஏவுகணைகள் “பல தொகுதிகளாக” நீரில் ஏவப்பட்டதாக தைவான் கூறியது. கடந்த 1996ஆம் ஆண்டு தைவானை சுற்றியுள்ள கடல் பகுதியில் சீனா ஏவுகணைகளை வீசியது.
இராணுவப் பயிற்சிகள் “பிராந்திய அமைதியைக் குழிதோண்டிப் புதைக்கும் பகுத்தறிவற்ற நடவடிக்கைகள்” என்று தைவான் சாடியுள்ளது.
தீவின் முற்றுகையை சோதிக்கும் நோக்கில் இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
“ஏவுகணைகளின் துல்லியம் மற்றும் ஒரு பகுதிக்கு எதிரி அணுகல் அல்லது கட்டுப்பாட்டை மறுக்கும் திறன் ஆகியவற்றை சோதிப்பதே நோக்கமாக இருந்தது” என்று கிழக்கு கட்டளையின் செய்தித் தொடர்பாளர் கேணல் ஷி யி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சீனா, ஞாயிற்றுக்கிழமை வரை இராணுவப் பயிற்சியைத் தொடர திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
More footage showing the #Chinese military exercises near #Taiwan. pic.twitter.com/PuLySxSdF4
— Pagetamil (@Pagetamil) August 4, 2022
“இந்த அப்பட்டமான ஆத்திரமூட்டலை எதிர்கொண்டு, நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க நாங்கள் சட்டபூர்வமான மற்றும் தேவையான எதிர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் ஒரு மாநாட்டில் கூறினார்.
உலகின் பரபரப்பான சில கப்பல் வழித்தடங்களில் இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, மேலும் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் அனைத்து பகுதிகளையும் தவிர்க்குமாறு தைவானின் கடல் மற்றும் துறைமுக பணியகம் கப்பல்களை கேட்டுக் கொண்டுள்ளது.