இலங்கையிலிருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு சிங்கப்பூரில் எந்த சலுகைகளும், இராஜதந்திர விலக்குரிமையும் வழங்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கோட்டாபயவிற்கு சிறிப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதா என, சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் அல்ஜூனிட் குழுத்தொகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாம் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணன் எழுத்துபூர்வமாக பதிலளித்தார்.
பொதுவாக, சிங்கப்பூர் அரசாங்கம், வெளிநாடுகளின் முன்னாள் தலைவர்கள் அல்லது அரசாங்கத் தலைவர்களுக்கு சலுகைகளை வழங்குவதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இலங்கையிலிருந்து தப்பியோடி மாலைதீவிற்குள் புகுந்த கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த மாதம் 14ஆம் திகதி சிங்கப்பூருக்குத் தனிப்பட்ட முறையில் வந்திருந்தார்.
அவரது குறுகியகால விசா அனுமதிக்கு 14 நாள் நீட்டிப்பு பெறப்பட்டதைத் தொடர்ந்து அவர் இங்கு இம்மாதம் 11ஆம் திகதி வரை சிங்கப்பூரில் தங்கியிருப்பார்.
அவரது விசா கோரிக்கையை அமெரிக்காவும் நிராகரித்துள்ள நிலையில், பொதுஜன பெரமுனவின் ஆட்சியிலுள்ள இலங்கைக்கு விரைவில் திரும்பி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.