இன்று (1) கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை மற்றும் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயக்கப்படவிருந்த இரவு அஞ்சல் புகையிரதம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த மார்க்கத்தில் பாறைகள் உருண்டு விழுந்ததாலும் புகையிரத பாதை தடைபட்டதாலும் புகையிரதம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று (1) காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த புகையிரதமும், பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதங்களும் தற்போது நாவலப்பிட்டி மற்றும் ஹட்டன் புகையிரத நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், புகையிரத மற்றும் பஸ் பாதைகளில் மண் மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளதால் புகையிரதத்திற்குள் இருக்கும் பயணிகளை ஏனைய புகையிரத நிலையங்களுக்கு ஏற்றிச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மண்சரிவு, மரங்கள் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்ததன் காரணமாக, கொட்டகலை புகையிரத நிலையத்திற்கும் தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கும் இடையில், ரொசெல்ல புகையிரத நிலையத்திற்கும் வட்டவளை புகையிரத நிலையத்திற்கும் இடையில், வட்டவளை ரயில் நிலையத்திற்கும் கலபட ரயில் நிலையத்திற்கும் இடையில்,
கலபட ரயில் நிலையத்திற்கும் இகுரு ஓயா ரயில் நிலையத்திற்கும் இடையில்,
நானுஓயா மற்றும் கிரேஸ்வெஸ்டன் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதை தடைப்பட்டுள்ளது.
வட்டவளை புகையிரத பாதையில் வட்டவளை மற்றும் உறுமாவல நிலையங்களுக்கு இடையில் புகையிரத பாதை மீது பாரிய பாறாங்கல் ஒன்று விழுந்துள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.
ரயில் பாதையில் இருந்து சுமார் 12 அடி உயரத்தில் இருந்து இந்தக் கல்லை வெடிக்கச் செய்ய வேண்டும் என்றும் ரயில்வே கட்டுப்பாட்டு அறை கூறுகிறது.