ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்களால் கண்டெடுக்கப்பட்ட பணத்தை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
போராட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ரூ.17.8 மில்லியன் பணம் இரண்டு வாரங்கள் கடந்தும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவில்லை என்பது இன்று தெரியவந்தது.
இதன்படி, குறித்த பணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜூலை 10 ஆம் திகதி, பொலிஸ் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட பணத்தொகை தம்மிடம் இருப்பதாகவும், அது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அறிவித்தது.
எனினும், நீதிமன்றத்தில் இன்னும் பணம் ஒப்படைக்கப்படவில்லை.
இதன்படி, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இந்த விடயம் தொடர்பில் சமர்பிக்குமாறு கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.
இதேவேளை, கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட பணத்தை எண்ணும் காணொளிகளில் காணப்பட்ட குழுவொன்றின் அங்கத்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட நால்வர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கொழும்பு கோட்டை நீதவான் நான்கு பேரையும் ரூ. தலா 500,000 சொந்த பிணையில் விடுவித்தார்.