இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் பிரவேசித்து, நேரலையில் தோன்றிய இருவரில் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய் செல்லவிருந்த போது இன்று (26) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர் அமர்ந்திருந்த போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) சுமார் நான்கு பேர் கொண்ட குழுவொன்று விமானத்திற்குள் நுழைந்து, நீதிமன்ற பிடியாணை இருப்பதாக கூறி அவரை விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியது
எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட நபருக்கான நீதிமன்ற பிடியாணையை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பெற்றுக்கொள்ளவில்லை எனவும், குடிவரவு மற்றும் குடியகல்வு நடைமுறைகளை முடித்துவிட்டு விமானத்தில் அமர்ந்திருந்த போதே அவர் கைது செய்யப்பட்டதாகவும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி ஒருவர் இன்று இரவு தெரிவித்தார்.
அவர் கைது செய்யப்படும் போது, நீதிமன்றில் இருந்து பெறப்பட்ட பிடியாணையை பொலிஸ் அதிகாரிகள் முன்வைக்கவில்லை எனவும், விமானத்தில் இருந்த வெளிநாட்டவர்கள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விமானத்துக்குள் போலீஸ் அதிகாரிகளுடன் அவர் சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
GotaGoHome activist Dhaniz Ali arrested while trying to leave for Dubai on a flight from the BIA. He was accused of entering National TV. pic.twitter.com/6UZyE2QpVX
— Pagetamil (@Pagetamil) July 26, 2022
கடந்த 13ஆம் திகதி இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பின்னர் கலையகத்திற்குள்ளும் நுழைந்தனர். இன்று கைதான தனிஷ் அலி மற்றும் மற்றுமொரு நபர் தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் நுழைந்து நேரடி ஒளிபரப்பில் ஈடுபட்டனர். பொலிசார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.