24.4 C
Jaffna
March 6, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

கோட்டாபய தப்பியோடிய கதை: ஜனாதிபதி மாளிகையிலிருந்து சிங்கப்பூர் சென்றது வரையான பரபரப்பு தகவல்கள்!

69 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த கோத்தபாய ராஜபக்ஷ 969 நாட்கள் மாத்திரம் ஜனாதிபதியாக பதவி வகித்து, மாபெரும் மக்கள் எதிர்ப்பிற்கு முகம் கொடுக்க முடியாமல் நாட்டிலிருந்து தப்பியோடினார்.

ஜனாதிபதி திங்கட்கிழமை இலங்கையை விட்டு வெளியேறும் வரை இப்படியொரு சம்பவம் நடக்கும் என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. குறைந்த பட்சம் ஜனாதிபதி எங்கே இருக்கிறார் என்றும் தெரிந்திருக்கவில்லை. அவரது இருப்பிடம் பற்றிய பல ஊகங்கள் மட்டும் வெளியாகியிருந்தன.

ஜூலை 9 ஆம் திகதி கொழும்பில் குவிந்த மக்கள் படை, ஜனாதிபதி மாளிகையை கையகப்படுத்தியது. போராட்டக்காரர்கள் அங்கு நுழைந்த போது, ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியைக் காணவில்லை.

சனிக்கிழமை பிற்பகல், உயரடுக்கு பிரமுகர் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அதிவேக நெடுஞ்சாலையில்  செல்வது, கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழைவது போன்ற காணொளிகள் சமூக ஊடக வலையமைப்புகளில் பரவியது.

துறைமுக வளாகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் பாதுகாப்புப் பணியாளர்கள்  அவசர அவசரமாக சில சூட்கேஸ்களை எடுத்துக்கொண்டு ஏறியது மற்றொரு காணொளியில் காட்டப்பட்டது.

அதன்படி சனிக்கிழமை இரவுக்குள் ஜனாதிபதி தொடர்பில் பல்வேறு தகவல்கள் பரவிக் கொண்டிருந்தன.

ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு அபுதாபிக்கு புறப்பட்டதாக கதை ஒன்று பரவியது. ஜனாதிபதி கடற்படைக் கப்பலில் ஏறி இந்தியாவுக்குப் புறப்பட்டதாக மற்றுமொரு கதை பரவியது.

ஜூலை 9ஆம் திகதி முதல், ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியது வரையான பல்வேறு தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.

அதன்படி ஜூலை 09 சனிக்கிழமை போராட்டக்காரர்கள் கொழும்புக்கு வருவார்கள் என்று முடிவெடுத்த ஜனாதிபதி அதற்கு எவ்வாறு தயாரானார்? ஜனாதிபதி எங்கே தவறு செய்தார்? ஜனாதிபதி மாளிகையை விட்டு ஜனாதிபதி வெளியேறியது எப்படி? ஜனாதிபதி எங்கே மறைந்தார்? ஜனாதிபதியை ஏற்றுக்கொள்ள முடியாது என மேற்குலக நாடுகள் கூறிய போது ஜனாதிபதி எவ்வாறு நாட்டை விட்டு வெளியேறினார்? இது குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலனாய்வு அறிக்கையின் தவறு!

ஜூலை 9 ஆம் திகதி இவ்வளவு பெருந்தொகையான மக்கள் கொழும்புக்கு வருவார்கள் என்று ஜனாதிபதியோ, பாதுகாப்புத் தரப்பினரோ நினைக்கவில்லை.  ஜூலை 09 போராட்டம் தொடர்பான பல அறிக்கைகளை, வெள்ளிக்கிழமைக்குள் தனக்கு சமர்ப்பிக்க ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

முதல் அறிக்கையில் 7,000 முதல் 10,000 பேர் வரை போராட்டத்தில் கலந்து கொள்ள கொழும்புக்கு வருவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது, மேலும் அவர்கள் கொழும்புக்கு வந்த பிறகு என்ன செய்வார்கள் என்று சில அனுமானங்கள் செய்யப்பட்டன.

ஆனால், அது போதாதென்று, சனிக்கிழமை போராட்டம் குறித்து மற்றுமொரு அறிக்கையை ஜனாதிபதி கோரியிருந்தார்.

அந்த அறிக்கையில், 7000 முதல் 10000 பேர் வரை கொழும்புக்கு வருவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சனிக்கிழமை நிலைமையை எதிர்கொள்ள பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்பட்டு, அதற்கு ஏற்றாற்போல் இராணுவம், பொலிசார் வரவழைக்கப்பட்டு, நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, ஜனாதிபதி இல்லத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, வீதித் தடைகள் போடப்பட்டன. வெள்ளிக்கிழமை (08) இரவுக்குள் அந்தக் கடமைகள் அனைத்தையும் முடிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதியை வெளியேற்றும் அபாயம் எதுவும் இந்த அறிக்கைகளில் காணப்படாததால், ஜனாதிபதியை ஜனாதிபதி மாளிகையிலேயே தங்க வைக்க பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதியை வெளியேற்றும் அளவுக்கு ஆபத்து இருக்காது என்பது அவர்களின் மதிப்பீடாக இருந்தது. எவ்வாறாயினும், ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அபாயம் ஏற்பட்டால், ஜனாதிபதி மாளிகையில் இருந்து அவரை இரகசியமாக வெளியேற்றும் பாதுகாப்புத் திட்டமும் இங்கு காணப்பட்டது.

தப்பியோடிய ஜனாதிபதி

சனிக்கிழமை காலை பாதுகாப்புப் படையினர் நிலவரத்தை மறுபரிசீலனை செய்த போது, அவர்களிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. நாடு முழுவதிலுமிருந்து கிடைத்த தகவலின்படி, காலை 8.00 -8.45 மணிக்குள் சில இலட்சம் மக்கள் கொழும்பு செல்வதற்கான பயணத்தைத் தொடங்கிவிட்டனர்  என்பது தெரிய வந்தது.

வெள்ளிக்கிழமைக்கு மன்னர் கிடைத்த புலனாய்வு அறிக்கைகளில், இந்த எண்ணிக்கை 7000 முதல் 10000 வரை இருக்கும் என்று கருதப்பட்டது, ஆனால் சனிக்கிழமை காலை 9 மணிக்கு, பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த தகவலின் மூலம், இந்த எண்ணிக்கை சில இலட்சங்களை தாண்டும் என்பது உறுதி செய்யப்பட்டது.

அவ்வாறு வரும் மக்கள் ஜனாதிபதி மாளிகையை நோக்கித் திரும்பினால், பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையும், போடப்பட்ட வீதித் தடைகளும் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு எவ்வாறாயினும் பொருந்தாது என்பது அவர்களின் கருத்து. இதன்படி, சனிக்கிழமை காலை 9 மணியளவில் ஜனாதிபதியின் பாதுகாப்புக் குழு ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தது.

துறைமுகத்திற்கு செல்லும் சுரங்கப்பாதை

திடீரென இவ்வாறான அச்சுறுத்தல்ஏற்பட்டால் ஜனாதிபதி மாளிகைக்கு தெற்கே அமைந்துள்ள கொழும்பு துறைமுகத்தின் ஊடாக ஜனாதிபதியை மிக இரகசியமாக வெளியேற்றுவதற்கு பாதுகாப்பு தரப்பினர் முன்னர் திட்டமிட்டிருந்தனர்.

அதன்படி, ஜனாதிபதியை மீட்பதற்கான பாதுகாப்புத் திட்டத்தை முன்னெடுத்த பாதுகாப்புப் படையினர் முதலில் சனிக்கிழமை காலை 9 மணிக்குள் துறைமுகத்தின் 9 கதவுகளையும் சீல் வைத்து மூட நடவடிக்கை எடுத்தனர்.

அதன் பின்னர் ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதியின் மனைவி அயோமா ராஜபக்ஷவை ஜனாதிபதி மாளிகையில் இருந்து பாதுகாப்பு படையினருக்கு மட்டுமே தெரிந்த சுரங்கப்பாதை வழியாக துறைமுகத்திற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்த சுரங்கப்பாதை மிகவும் பழமையானது, 75 முதல் 100 மீட்டர் நீளம் கொண்டது, இது ஜனாதிபதி மாளிகையில் இருந்து தரைக்கு அடியில் உள்ள துறைமுகத்தில் உள்ள பழைய கட்டிடம் வரை செல்கிறது.

அதன்படி, காலை 9.30 மணியளவில் நிலைமை மிகவும் மோசமாக மாறும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதால், உடனடியாக ஜனாதிபதி மற்றும் அவரது மனைவியை இந்த சுரங்கப்பாதை வழியாக அழைத்துச் சென்று  கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான கப்பலில் தங்க வைக்க பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்தனர்.

கொழும்பில் கூடும் மக்கள் கலைந்து சென்ற பின்னர் நிலைமை சுமுகமாக இருக்கும் என்பதால் ஜனாதிபதியையும் அவரது மனைவியையும் சுரங்கப்பாதை ஊடாக ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து வருவதே பாதுகாப்பு தரப்பினரின் திட்டமாகும். அதன் காரணமாக ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு தேவையான மேலதிக ஆடைகளை எடுத்துச் செல்ல அவர்கள் ஏற்பாடு செய்யவில்லை.

நீர்கொழும்பு கடலுக்கு கொண்டு செல்லப்படும்! இரவெல்லாம் கப்பலின் உள்ளே!

ஆனால் காலை 10 மணியளவில் நிலைமை விபரீதமானது. கொழும்பு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை நோக்கித் திரும்புகிறார்கள் என்பது பாதுகாப்பு தரப்பினருக்கு தெரிந்தது.

அதன்படி, ஜனாதிபதி மாளிகை நோக்கிச் செல்லும் சைத்தம் வீதி மற்றும் இலங்கை வங்கி அவென்யூவை முற்றாக முடக்கிய போராட்டக்காரர்கள், வீதித் தடைகளை ஒவ்வொன்றாகக் கவிழ்த்துக்கொண்டு ஜனாதிபதி மாளிகைக்குள் நுழையத் திட்டமிட்டுள்ளனர் என்பதை பாதுகாப்புப் படையினருக்கு உணர அதிக நேரம் எடுக்கவில்லை.

இதேவேளை, ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு தேவையான அனைத்து ஆடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை பல பெரிய சூட்கேஸ்களில் சுரங்கப்பாதை வழியாக துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலுக்கு எடுத்துச் செல்ல பாதுகாப்பு தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன் பின்னர் கடற்படைக்கு சொந்தமான இரண்டு டோரா கப்பல்களின் பாதுகாப்பில் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி பயணித்த கப்பல் நீர்கொழும்பு கடல் எல்லையை நோக்கி கொண்டு செல்லப்பட்டு இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பில் பாதுகாப்பாக நங்கூரமிடப்பட்டுள்ளது.

அரசியல் மாற்றம்

சனிக்கிழமை பிற்பகலில், ஜனாதிபதி மாளிகையைச் சுற்றியுள்ள பகுதிகள் போர்க்களமாக மாறியது. மக்கள் ஜனாதிபதி மாளிகையைச் சுற்றியிருந்த வீதித் தடைகளை ஒவ்வொன்றாகப் புரட்டிப் போட்டபடி முன்னேறியபோது பாதுகாப்புப் படையினர் அவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

இறுதியாக, மக்கள் அனைத்து வீதித் தடைகளையும் உடைத்துக்கொண்டு ஜனாதிபதி மாளிகையின் கடைசி வாயிலை அடைந்ததை அடுத்து, படையினர் வானத்தை நோக்கி சுட்டு மக்கள் போராட்டத்தை அடக்க கடைசி முயற்சியில் ஈடுபட்டாலும், எதற்கும் அஞ்சாத மக்கள் படை, அனைத்து சோதனைச்சாவடிகளையும் உடைத்து வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றனர்.

ஜனாதிபதி மாளிகை கைப்பற்றப்பட்ட போதும்,  ஜனாதிபதி பற்றிய தகவல்கள்  அனைவருக்கும் புரியாத புதிராகவே இருந்தது.

ஜனாதிபதி உடனடியாக பதவிவிலக வேண்டும், அப்படி நடந்தால் மட்டுமே ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறுவோம் என போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர்.

கடல் வழியாக இந்தியா சென்றாரா? ஜெட் விமானத்துடன் விமானத்தில் ஏறினாரா?

ஜனாதிபதியின் பதிலுக்காக அனைவரும் காத்திருந்தனர். ஆனால் ஜனாதிபதி எங்கே இருக்கிறார், ஜனாதிபதி என்ன செய்ய நினைக்கிறார் என்பதை எவராலும் புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் கூட ஜனாதிபதியை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் சிலர் ஜனாதிபதி தொடர்பில் வினவிய போது அவர்களுக்கும் தகவல் கிடைக்கவில்லை.

சனிக்கிழமை பிற்பகல் சமூக வலைதளங்களில், பாதுகாப்புப் படையினருடன் ட்ரக் வண்டியொன்று கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் வந்து விமான நிலைய வளாகத்தை வந்தடைந்த வீடியோ பரவியதால், ஜனாதிபதி கண்டிப்பாக இலங்கையை விமானம் மூலம் புறப்பட ஏற்பாடு செய்துவிட்டார் என பலரும் நினைத்தனர்.

இதுதவிர கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் பாதுகாவலர்கள் நிறைய பொதிகளை ஏற்றிக்கொண்டு செல்வது போன்ற காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதால் ஜனாதிபதி கடல் மார்க்கமாக வேறு நாட்டுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என சிலர் கருதினர்.

ஆனால் இங்கு நடந்தது இரண்டும் அல்ல, முற்றிலும் மாறுபட்ட சம்பவம்.

வரிசையில் அமைச்சர்கள் இராஜினாமா!

ஜனாதிபதி இவ்வாறு மறைந்திருந்த நிலையில், நாட்டின் அரசியலும் மிகவும் சூடுபிடித்திருந்தது. ஜனாதிபதியின் மறைவையடுத்து பந்துல, தம்மிக்க, ஹரீன், மனுஷ போன்ற அமைச்சரவை அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக பதவி விலகும் போது அரசாங்கத்தில் பாரிய பிரச்சினை காணப்பட்டது.

பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க உடனடியாக கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்த நடவடிக்கை எடுத்தார். பாதுகாப்புக் காரணங்களுக்காக கட்சித் தலைவர் கூட்டம் நடைபெறும் இடம் குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜேவிபி ஆகிய கட்சிகள் இதில் பங்கேற்பதில்லை என தீர்மானித்ததையடுத்து ரணில் அழைப்பு விடுத்திருந்த கட்சித் தலைவர்களின் கூட்டம் அந்த இடத்திலேயே முடிவடைந்தது.

ரணிலை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் ரணில் அழைக்கும் எந்தவொரு கூட்டத்திலும் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் சபாநாயகர் கட்சி தலைவர்கள் கூட்டத்தை அழைத்தால் பங்கேற்க தயாராக உள்ளோம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து சபாநாயகர் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அவசர கட்சித் தலைவர் கூட்டத்தை அழைத்தார்.

நடக்கடலில் கோட்டா!

ஜனாதிபதி தங்கியிருந்த இடம் குறித்த முதல் குறிப்பை சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன. கடற்படை கப்பலில் இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பில் ஜனாதிபதி பாதுகாப்பாக தங்கியிருப்பதாகவும், பாதுகாப்பு காரணங்களால் குறித்த இடத்தை வெளியிட முடியாது எனவும் கடற்படையின் சில தகவல் மூலங்களை மேற்கோள் காட்டி அவர்கள் செய்தி வெளியிட்டனர்.

அவ்வேளையில், நாட்டில் நிலமை மிகவும் பாரதூரமான நிலைக்கு நகர்ந்து கொண்டிருந்ததால், பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி உடனடியாக தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவிக்க வேண்டும் என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதனை எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் தெரிவித்த போது, ​​பொதுஜன பெரமுனவினை பிரதிநிதித்துவப்படுத்தும் டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட 16 சுயேச்சை எம்.பி.க்கள் ஜனாதிபதியை உடனடியாக பதவி விலகுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

சனிக்கிழமை மாலை கப்பலில் இருந்து சபாநாயகரை அழைத்து அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும், கட்சித் தலைவர்களின் கூட்டத்தை உடனடியாக அழைத்து அங்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை தனக்குத் தெரிவிக்கம் படியும், அதன்படி செயல்படத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை ஊடகங்களும் இதனைத் தெரிவித்ததால், சபாநாயகர் தலைமையில் சனிக்கிழமை மாலை ஆரம்பமான கட்சித் தலைவர்கள் கூட்டம் மீது நாட்டின் கவனம் செலுத்தப்பட்டது.

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் பல கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர், ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு சிலர் ஜூம் தொழில்நுட்பம் மூலம் அதில் இணைந்தனர்.

உடனடியாக பதவி விலகுமாறு ஜனாதிபதிக்கு அறிவிக்குமாறு சபாநாயகரிடம் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஏகமனதாக அறிவித்தனர். பிரதமரை பதவி விலகச் சொல்லி ஜனாதிபதி மட்டுமல்ல நாட்டு மக்களும் போராடி வருவதாக கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆரம்பத்தில் ரணில் பல தடவைகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இறுதியில் அதற்கு சம்மதித்த ரணில், தானும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என தெரிவித்துள்ளார்.

இதன்படி ஜனாதிபதி பதவி விலகியதன் பின்னர் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாகவும், பிரதமர் பதவி விலகியதன் பின்னர் உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டி பிரதமரை தெரிவு செய்து சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமென கட்சித் தலைவர்கள் தீர்மானித்திருந்தனர்.

இந்த இறுதித் தீர்மானத்தை எடுத்த பின்னர் சபாநாயகர் உடனடியாக ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் அறிவிக்க நடவடிக்கை எடுத்தார். சபாநாயகர் கூறிய முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு.

ஜனாதிபதியும் பிரதமரும் கூடிய விரைவில் தமது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்.
நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகளுக்கு ஏற்பவும், அரசியலமைப்பு ரீதியிலும் அடுத்த கட்டமாக ஏழு நாட்களுக்குள் நாடாளுமன்றத்தை கூட்டி ஒருமித்த கருத்து மூலம் செயல் ஜனாதிபதியை நியமிக்க முடிவு எடுக்க வேண்டும்.
அந்த ஜனாதிபதியின் கீழ் தற்போதைய பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வகட்சி பொது பிரதிநிதிகளின் உடன்படிக்கையின் பிரகாரம் புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும்.
அதன் பின்னர் குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தலை நடத்தி புதிய பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான வாய்ப்பை மக்களுக்கு வழங்குதல்.

இதேவேளை, மேலும் மூன்று மாற்று முன்மொழிவுகளையும் பிரதமர் முன்வைத்தார்.

ஜனாதிபதி உடனடியாக ராஜினாமா செய்து பிரதமரை தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும்.
இதன்மூலம் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்படும்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் பதவி விலகி, பாராளுமன்றத்தின் பிரதிநிதிகளை செயற்குழு ஜனாதிபதியாக நியமித்தால், அனைத்துக் கட்சிகளின் இணக்கப்பாட்டின் மூலம் புதிய பிரதமரை நியமித்து, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இடைக்கால அரசாங்கத்தை அமைத்து புதிய அரசாங்கம் அமைய வாய்ப்பளிக்க வேண்டும்.

எனினும், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் அறிவித்த  போதிலும், பின்னர் பிரதமரின் ஊடகப் பிரிவு சற்று வித்தியாசமான அறிவித்தலை வெளியிட்டது. சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்கி அதன் பிரதமரை நியமித்ததன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகரின் கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் எதிர்பார்த்திருந்த ஜனாதிபதியின் பதில் ஒரு நொடியில் கிடைத்துள்ளது. கட்சித் தலைவரின் முடிவின்படி ஜூலை 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த முடிவால் நாடு சற்றே அமைதியடைந்தாலும், ஜனாதிபதியின் பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவது, ஜனாதிபதி எங்கே தங்க வைக்கப்படுவார், ஜனாதிபதியின் அடுத்த திட்டம் என்ன என்பதுதான் பாதுகாப்பு தரப்பினருக்கு எழுந்த அடுத்த பலமான பிரச்சினை.

கடலில் இருந்து நிலத்திற்கு அழைத்து வரப்பட்ட கோட்டா!

இதேவேளை, நீர்கொழும்பு கடற்பரப்பில் ஒரு நாள் முழுவதையும் கழித்த பாதுகாப்பு தரப்பினர் ஜனாதிபதியை கொழும்பு துறைமுகத்தில் உள்ள பாதுகாப்பான இடத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித், சபாநாயகர் மற்றும் அவருக்கு விசுவாசமான அமைச்சர்கள் பலருக்கு மூன்றாம் தரப்பினர் மூலம் பல செய்திகளை அனுப்ப ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கு அனுப்பப்பட்ட முதல் செய்தியில், தான் ஜனாதிபதியாக நீடிக்க விரும்புவதாகவும், 19வது திருத்தத்தை அமுல்படுத்தி நிறைவேற்று அதிகாரங்களை பிரதமர் தலைமையிலான பாராளுமன்றத்திற்கு வழங்குவேன், பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்கிறீர்களா என கேட்டிருந்தார்.

அமைச்சராகவும், பெயரளவுக்கு ஜனாதிபதி பதவியில் இருக்க அவருக்கு வாய்ப்பளிக்கவும் கோரியிருந்தார்.

ஆனால் சஜித் ஜனாதிபதியின் யோசனைய முற்றாக நிராகரித்து விட்டார். மக்களால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதியின் கீழ் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்ய தயாராக இல்லை என சஜித் ஜனாதிபதிக்கு செய்தியொன்றை விடுத்துள்ளார்.

சஜித்துக்கு அனுப்பப்பட்ட இரண்டாவது செய்தி!

அதனையடுத்து மீண்டும் சஜித்துக்கு வேறு தரப்பினரின் ஊடாக இன்னொரு செய்தியை ஜனாதிபதி அனுப்பினார்.

சஜித்தை பிரதமராக்கியதன் பின்னர் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகத் தயார் எனவும், ஆனால் அதன் பின்னர் தானும் தனது குடும்பமும் நாட்டில் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கேட்டிருந்தார். அதாவது, தனது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தர வேண்டுமென கேட்டிருந்தார்.

செய்தியை கொண்டு வந்த நபரிடம் சஜித் அளித்த பதில்- முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு அரசியலமைப்புப் பாதுகாப்பை வழங்குவதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையென்றாலும்,  அதைத் தாண்டிச் சென்று ஜனாதிபதியைப் பாதுகாப்பதற்காக வழக்குகளில் இருந்தோ அல்லது வேறு எந்த சட்ட விஷயங்களிலோ இருந்தோ பாதுகாப்பதற்கான உத்தரவாதத்தை வழங்க முடியாது என்று அவர் கூறினார்.

கோட்டாவை கைகழுவிய அமெரிக்கா!

அதன்படி, ஜனாதிபதி உடனடியாக அமெரிக்காவிற்கு செல்ல முடிவு செய்தார்.

அமெரிக்காவில் நீண்டகாலம் வசித்திருந்த கோட்டா, இலங்கை, அமெரிக்க இரட்டை குடியுரிமை பெற்றிருந்தார். அவரது ஒரே மகனும் அங்கு வசிக்கிறார்.

ஜனாதிபதியின் மனைவி அயோமாவும் அமெரிக்காவின் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்.

இதன்படி, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் ஊடாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மற்றும் வொஷிங்டனில் உள்ள தொடர்புடைய திணைக்களங்களுக்கு இது தொடர்பான கோரிக்கையை ஜனாதிபதி உடனடியாக அனுப்பி வைத்தார்.

ஆனால் அமெரிக்கக் குடியுரிமையை திரும்பப் பெறுவதற்கு  நடவடிக்கை எடுத்ததாகவும், அப்படிச் செய்வது அமெரிக்க அரசாங்கத்தை அவமதிக்கும் செயலாகக் கருதப்பட்டு, ஜனாதிபதியை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாகவும் அமெரிக்கத் தரப்புகள் தெரிவித்தன.

மீண்டும் விசா பெறுவதற்கு நீண்ட நடைமுறையை பின்பற்ற வேண்டும் என அவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

கூடுதலாக, ஜனாதிபதிக்கு அமெரிக்காவிலிருந்து மற்றொரு தீவிர செய்தி கிடைத்தது. ஜனாதிபதியின் நிர்வாகத்தின் போது ஜனாதிபதி நடந்துகொண்ட விதம் மற்றும் தனது அதிகாரங்களைப் பயன்படுத்திய விதம் தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் பல கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்த நிபந்தனையின் கீழ் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு ஜனாதிபதிக்கு விசா வழங்க முடியாது எனவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த எதிர்பாராத பதிலால் ஜனாதிபதி பெரும் சிரமத்தை எதிர்கொண்டார். ஆனால் ஜனாதிபதி தனது முயற்சியை கைவிடாமல் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள லலித் சந்திரதாசவை அழைத்து அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான வழியைத் தேடினார். ஜனாதிபதியின் சகோதரியை மணந்தவர் லலித் சந்திரதாச. அவர் ஜனாதிபதியின் மைத்துனர்.

அதன்படி, இது தொடர்பாக வழக்கறிஞர்கள் குழுவுடன் லலித் விவாதித்தபோது, ​​ஜனாதிபதியின் மனைவி அயோமா இன்னும் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற பெண் என்பதால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஜனாதிபதி கிரீன் கார்ட் விசாவைப் பெற விண்ணப்பம் அனுப்பலாம் என்றார்கள். அது ஒன்றே எஞ்சியுள்ள தெரிவு என சட்டத்தரணிகள் லலித்திடம் சுட்டிக்காட்டினர். ஆனால் அது அதிக காலம் எடுக்கும் செயலாகும் என்றும் லலித்துக்கு தெரிவித்தனர்.

இது குறித்து லலித் ஜனாதிபதியிடம் தெரிவித்ததையடுத்து, செயல்முறையை ஆரம்பிக்குமாறு தெரிவித்த ஜனாதிபதி, தனது அமெரிக்க பயணத்தை கைவிட்டு, அடுத்து செல்ல வேண்டிய இடங்களை தேடினார்.

அடுத்தடுத்த நிராகரிப்புக்களால் ஆடிப்போன கோட்டா!

ஜனாதிபதியின் இரண்டாவது தெரிவாக அயர்லாந்து இருந்துள்ளது. உடனடியாக அயர்லாந்து செல்ல விசா விண்ணப்பம் அனுப்பப்பட்டாலும், அயர்லாந்து தூதரகம் காரணம் கூறாமல் விசா விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஜனாதிபதி, தனது மூன்றாவது தெரிவாக,  பல்கேரியாவிற்கு விசா வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் அதுவும் நிராகரிக்கப்பட்டதால் ஜனாதிபதி கோபமடைந்தார். என்ன செய்வது என்று யோசிக்க முடியாமல் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினார்.

மேற்குலக நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்ல முடியாது என்பதை உணர்ந்த ஜனாதிபதி, இலங்கையில் தங்கியிருக்க முடியாது என்பதால் வேறு நாட்டிற்கு தப்பிச் செல்லும் திட்டத்தின்  கடைசித் தெரிவாக, மத்திய கிழக்கில் உள்ள அபுதாபியை தீர்மானித்தார்.

ஜனாதிபதி உடனடியாக தனது நண்பர்கள் இருவரிடமும் பேசி தான் அபுதாபி செல்லவிருப்பதாகத் தெரிவித்ததையடுத்து, அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாகத் திட்டமிடத் தொடங்கினர்.

ஜனாதிபதிக்கு தேவையான விமான டிக்கெட்டுகளை ஒரு நண்பர் உடனடியாக முன்பதிவு செய்த நிலையில், மற்றொரு நண்பர் அபுதாபியில் ஜனாதிபதி பாதுகாப்பாக தங்கக்கூடிய இடங்களை தயார் செய்ய நடவடிக்கை எடுத்தார். அபுதாபியில் சுமார் ஒரு மாதம் பாதுகாப்பாக தங்கிவிட்டு, கிரீன் கார்ட் விசா வசதியின் கீழ் மனைவியுடன் அமெரிக்காவுக்குள் நுழைவதுதான் ஜனாதிபதியின் திட்டம்.

அதன்படி,  திங்கட்கிழமையே ஜனாதிபதி நாட்டை விட்டு அபுதாபிக்கு செல்வதற்காக விமானத்தை முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பசிலை பதற வைத்த சம்பவம்!

ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகளை தயார் செய்து கொண்டிருந்த வேளையில் மற்றுமொரு ராஜபக்‌ஷ நாட்டை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகளை மிகவும் இரகசியமான முறையில் தயார் செய்து கொண்டிருந்தார்.

அது வேறு யாருமல்ல, ஜனாதிபதியின் இளைய சகோதரரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ஷவே.

யாருக்கும் தெரியாமல் அமெரிக்காவுக்குத் தப்பிச் செல்வதுதான் பசிலின் திட்டம்.

இதன்படி, பசில் ஜனாதிபதிக்கு முன்பாக நாட்டை விட்டு வெளியேற விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, அவருக்கு திங்கட்கிழமை அதிகாலை 3.15 மணிக்கு நேரம் கிடைத்தது. கட்டுநாயக்காவிலிருந்து டுபாய் வழியாக அமெரிக்கா நோக்கி பயணிக்கும் எமிரேட்ஸ் இ.கே. 649 இலக்க விமானம் அதற்காக ஒதுக்கப்பட்டது.

கோட்டாவின் திட்டம் இப்படி!

இதன்படி, பசில் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் குறித்த நேரத்தில் ஜனாதிபதியை கொழும்பில் இருந்து தரைவழியாக இரத்மலானை விமான நிலையத்திற்கு வரவழைத்து, பின்னர் விமானம் மூலம் ஜனாதிபதியை கட்டுநாயக்கவிற்கு அருகில் உள்ள விமானப்படை தளத்திற்கு அழைத்துச் செல்வதே ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறும் திட்டமாகும். அங்கிருந்து ஜனாதிபதியை பத்திரமாக விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதுதான் திட்டம். ஜனாதிபதியின் சிறப்புரிமையின் கீழ் ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ காரை விமானத்திற்கு அருகில் கொண்டு வர முடியும் என்பதால், விமானம் புறப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதியை எதிஹாட் விமானத்திற்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது. மேலும் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் அதற்கான ஆவணங்களை குடிவரவு அதிகாரிகள் முன் பூர்த்தி செய்வார்கள்.

எனினும், பசிலுக்கு நடந்த அர்ச்சனையை அறிந்த கோட்டா அதிர்ச்சியடைந்தார்.

ஜூலை 12ஆம் திகதி- செவ்வாய்க்கிழமை இரவு அவரது பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பயண ஏற்பாடுகளை, கோட்டா பாதுகாப்பு செயலாளராக இருந்த போது கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் நடத்தி அதிக லாபமீட்டிய தொழிலதிபரும், கோட்டாவுடன் இந்த பயணத்தில் இணையவிருந்தார்.

ஜனாதிபதியும் பரிவாரங்களும் பயணிக்கும் விமானத்தின் ஊழியர்கள், விமானிகள், விமான நிலைய தொழிற்சங்கங்களிற்கு இந்த தகவல் கிடைத்ததும், அவர்கள் ஜனாதிபதியை ஏற்றிச் செல்ல மறுத்து விட்டனர்.

இதையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ், ஜனாதிபதியின் நண்பர் அரண பெர்னாண்டோ ஆகியோர், சிறிலங்கன் எயார்லைன்ஸ் தலைவர் அசோக் பத்திரகேவை தொடர்பு கொண்டு உதவிகோரினர். எயார்லைன்ஸ் தலைவரும் முயற்சி செய்து பார்த்தார்.

எனினும், விமானிகளையோ அல்லது நிறுவன ஊழியர்களையோ வற்புறுத்த முடியாது என கூறி, இந்த நடவடிக்கையிலிருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளார்.

இதனால், ஜனாதிபதி பயணிக்க முடியாத நிலையேற்பட்டது.

இதேவேளை, பயணியொருவர் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கோட்டா குழு விமானத்தில் ஏறினால், பயணிகள் சேர்ந்து அவரை அடிப்போம் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, விமான பயணம் கைவிடப்பட்டது.

பின்னர் இரவு 9.20 மணிக்கு கட்டுநாயக்காவிலிருந்து நேரடியாக அபுதாபிக்கு செல்லும் எதிஹாட் YE 265 இலக்க விமானத்தில் முன்பதிவு செய்யப்பட்டது. எனினும் அதிலும் பயணிக்க முடியவில்லை.

இப்பொழுது கோட்டாவின் நிலைமை- வீட்டிலும் இருக்க முடியவில்லை. வீதிக்கும் செல்ல முடியவில்லை.

அதன்படி, உடனடியாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த உயர்மட்ட விவாதம் தொடங்கியது. இதன்போது பல யோசனைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன. ஜனாதிபதி இன்னும் பதவியில் இருப்பதால் அந்த சிறப்புரிமைகளை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறுவதும் அதில் ஒன்று. அதற்கு விமானப்படை விமானம் பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்பட்டது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் குடிவரவு அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை எனவும், உரிய ஆவணங்களை குடிவரவு அதிகாரிகளிடம் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வழங்கி அனுமதி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பிச்செல்ல வழியுண்டா?

ஆனால் இன்னொரு பிரச்சனையும் இருந்தது. அது விமானப்படை விமானங்கள் பறக்கும் தூரம். தற்போது, ​​விமானப்படையின் விமானம் அபுதாபிக்கு பறக்க முடியாது, மேலும் அது செல்லக்கூடிய அதிகபட்ச தூரம் இந்தியாவின் கொச்சினுக்கு மட்டுமே. அதன்படி, கோட்டா கொச்சின் சென்று, விமானத்தில் ஏறி அபுதாபி செல்ல வேண்டும் என்று அங்கு கூறப்பட்டது.

இது தவிர மேலும் பல யோசனைகளும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டன. பிரத்தியேக ஜெட் விமானம் மூலம் ஜனாதிபதி வெளிநாடு செல்ல வேண்டும் என்பது முன்மொழிவுகளில் ஒன்றாகும்.

ஆனால் அதில் சில பிரச்சனைகள் இருந்தன. அதில் ஒரு பிரச்சனை என்னவென்றால், தனியார் ஜெட் விமானத்தை கொண்டு வந்தால் கட்டுநாயக்க மற்றும் இரத்மலானை விமான நிலையத்தில் தான் தரையிறங்க முடியும். ஆனால் கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்டால், அதற்கும் குடியேற்ற அதிகாரிகளின் ஒப்புதல் தேவை. எனவே கட்டுநாயக்கவிற்கு தனியார் ஜெட் விமானத்தை கொண்டு வருவதற்கான யோசனை பொருத்தமற்றது.

மேலும், தனியார் ஜெட் விமானங்கள் இரத்மலானையில் தரையிறங்கும் வாய்ப்பு இதற்கு முன்னர் இருந்த போதிலும், ஜனாதிபதி ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர் அந்த வசதியை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்ததால், இரத்மலானையிலிருந்து புறப்படும் வாய்ப்பும் இழக்கப்பட்டது.

அதன்படி, இராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகொப்டரில் ஜனாதிபதியை இந்தியாவின் கொச்சிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து டுபாய்க்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு எடுக்கப்பட்ட உடனேயே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது.

இந்தியா கயிறு கொடுத்தது!

கடந்த காலங்களில் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் இந்தியாவுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்ததால், இம்முறையும் தயக்கமின்றி ஜனாதிபதிக்கு இந்தியா உதவும் என்று பலர் நினைத்தனர்.

ஏனெனில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. அனைத்து டெண்டர் நடைமுறைகளையும் மீறி, புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்களின் ஏகபோக உரிமையை அதானி என்ற இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுத்தது.

இதனால், இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது, ​​இந்தியா கடந்த சில மாதங்களில் எரிபொருளைப் பெறுவதற்கு மூன்று மாத கடன் வசதியை வழங்க ஏற்பாடு செய்தது.

அதன்படி, ஜனாதிபதியின் கோரிக்கையை இந்தியா அனுமதித்து ஜனாதிபதியின் உயிர் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றும் என ஜனாதிபதியின் நெருக்கமான வட்டாரங்கள் கருதின.

ஆனால் நிலைமை அப்படி இருக்கவில்லை. இலங்கையின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாகக் கண்காணித்து வந்த இந்தியா, பொதுமக்களின் எதிர்ப்பு பெருமளவில் ராஜபக்சக்களைக் குறிவைத்து, குறிப்பாக ஜனாதிபதியையே குறிவைத்ததாகப் புரிந்துகொண்டது.

இந்த நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற ஜனாதிபதிக்கு உதவினால், எதிர்க்கட்சிகள் இந்தியாவை நோக்கி திரும்பும் என இந்திய அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, இலங்கையிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கையை நிராகரித்த இந்திய அதிகாரிகள், இந்திய சட்டத்தின்படி எந்தவொரு வெளிநாட்டு பாதுகாப்புத் துறைக்கும் சொந்தமான விமானம் அல்லது ஹெலிகொப்டர் இந்தியாவில் தரையிறங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தியாவின் கடைசி நிமிட பதிலால் ஜனாதிபதியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

மாலைதீவே தஞ்சம்!

அதன்படி, ஜனாதிபதிக்கு நாட்டை விட்டு வெளியேற ஒரே ஒரு வழி மட்டுமே எஞ்சியிருந்தது. விமானப்படை விமானத்தில் மாலைதீவு சென்று அங்கிருந்து சிங்கப்பூர் சென்று இறுதி இலக்காக இருந்த அபுதாபிக்கு புறப்பட வேண்டும். வேறு எந்த வாய்ப்பும் இல்லாததால், ஜனாதிபதி அதற்கு இறுதியாக ஒப்புக்கொண்டார்.

அதன்படி, இராணுவ விமானத்தில் மாலைதீவு சென்று, அடுத்த விமானத்தில் சிங்கப்பூர் சென்று, அங்கு சுமார் ஒரு மாத காலம் கழித்து, அபுதாபிக்கு செல்வது என திட்டம். அபுதாபியில் அமர்ந்தபடியே அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தேவையான ஏற்பாடுகளை முடித்துவிடுவதுதான் இறுதித் திட்டம்.

மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்லும் போது வழக்கமான பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய ஆட்சேபனை இருந்தால் அதிக விலையில் சிறப்பு விமானம் இயக்கவும் திட்டமிடப்பட்டது.

மாலைதீவு பயணத்திற்கான திட்டமிடல், நாட்டின் தற்போதைய சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மொஹமட் நஷீத்துடன் மிக நெருக்கமான உறவைப் பேணிவரும் மஹிந்த மற்றும் நாமல் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் இருவரும் உடனடியாக நஷீத்திடம் பேசி, நாட்டின் தற்போதைய நிலைமையை விளக்கி, ஜனாதிபதியை விரைவில் மாலைதீவுக்குள் நுழைய அனுமதித்து, அங்கிருந்து சிங்கப்பூர் செல்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொண்டனர்.

கோட்டாவின் கோரிக்கையை இந்தியாவும் நிராகரித்ததால் மாலைதீவு அதிகாரிகளின் உடன்பாடு பெறுவது கடினம் என்பதை அப்போது நஷீத் உணர்ந்திருந்தார். ஆனால் ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கிய உறவைப் பேணி வருவதால் நஷீட் தீவிர முயற்சி மேற்கொண்டு, நிலைமையை சமாளித்தார்.

சில மணி நேர நடவடிக்கைக்குப் பிறகு, விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் மாலைதீவுக்குள் ஜனாதிபதி நுழைவதற்கு நஷீட் மாலைதீவு ஜனாதிபதியிடம் அனுமதி பெற முடிந்தது. அந்தத் தகவலை இலங்கைக்கு தெரிவித்தனர்.

ஜனாதிபதியையும் அவரது மனைவி அயோமாவையும் புதன்கிழமை அதிகாலை நாட்டிலிருந்து வெளியேற்ற தேவையான ஏற்பாடுகளை விமானப்படை மேற்கொண்டது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அதிகாலை 1.30 மணியளவில் அன்டோனோவ் 32 ரக விமானத்தில், ஜனாதிபதியும், பாரியாரும், இரண்டு பாதுகாவலர்களும் மாலைதீவு புறப்பட்டனர்.  அதிகாலை 3 மணியளவில் மாலைதீவு தலைநகர் மாலே விமான நிலையத்தில் தரையிறங்கினர்.

சொகுசு விடுதி

மாலைதீவின் கிரிபுஷி தீவில் ஜனாதிபதியும், பாரியாரும் தங்க வைக்கப்பட்டனர். அங்குதான் மாலைதீவு இராணுவ வீரர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

அங்குள்ள சொகுசு ​​ஹோட்டலில் ஒரு இரவுக்கு இலங்கை நாணயம் சுமார் 18 இலட்சத்தை செலவிட்டு, அங்கு தங்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும், மாலைதீவின் தெற்குப் பகுதியில் தங்கியிருந்த போதும், சிங்கப்பூர் செல்வது எப்படி என ஜனாதிபதி திட்டமிட்டிருந்தார். வழக்கமான பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய முடியாததால், இறுதியாக சிறப்பு விமானம் வாடகைக்கு எடுத்து சிங்கப்பூர் செல்ல முடிவு செய்யப்பட்டது.

ஜனாதிபதியை சிங்கப்பூர் அழைத்துச் செல்வதற்கு சிங்கப்பூர் தனியார் விமான நிறுவனமொன்றை அணுகியுளள்னர். அவர்கள் வழக்கமான கட்டணத்தை விட நான்கு மடங்கு தொகையை அதிகமாக கேட்டுள்ளனர்.

இறுதியில் வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில் ஜனாதிபதி தரப்பு அதற்கும் சம்மதம் தெரிவித்திருந்தது.

ஆனால் ஜனாதிபதிக்கு எதிராக சர்வதேச அளவில் எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், ஜனாதிபதியுடன் சிங்கப்பூர் செல்ல முடியாது என தனியார் விமான நிறுவனமும் கடைசி நேரத்தில் தெரிவித்தது.

அதன்படி கடைசி நேரத்தில் கூட ஜனாதிபதியின் சிங்கப்பூர் பயணம் தடைபட்டது.

ஆனால், எப்படியும் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்பதால், இறுதியாக சவூதி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சாதாரண பயணிகள் விமானத்தில் ஏறி சிங்கப்பூர் செல்ல கோட்டா முடிவு செய்தார். அதன்படி புதன்கிழமை பிற்பகல் சவுதி ஏர்லைன்ஸ் எஸ்.வி. 788 என்ற விமானத்தில் ஏறி மனைவியுடன் மாலைதீவுக்கு புறப்பட்டார்.

சிங்கப்பூரில் அடைக்கலம் கொடுத்த கோடீஸ்வரர் யார்?

இதன்படி, ஜனாதிபதி தற்போது சிங்கப்பூரில் தனக்கு மிகவும் நெருக்கமான பலம் வாய்ந்த வர்த்தகர் ஒருவரின் பாதுகாப்பில் தங்கியுள்ளார். இந்த சக்திவாய்ந்த வர்த்தகர் இலங்கைக்கு பல தடவைகள் விஜயம் செய்துள்ளதாகவும், சிங்கப்பூர் அரசாங்கத்துடனும் நெருங்கிய தொடர்புகளை வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நீதி வழங்கப்படவில்லை’: ஏற்றுக்கொண்டார் ரணில்!

Pagetamil

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Pagetamil

Leave a Comment