நாட்டை விட்டு தப்பியோட முயற்சிக்கும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பேரிடியாக, அவரது விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. இந்தியாவின் இந்து ஆங்கில ஏடு இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கை மற்றும் அமெரிக்காவின் இரட்டைக் குடியுரிமை பெற்ற கோட்டபய, 2019 தேர்தலுக்கு முன்னதாக, தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டார்.
அவர் இலங்கையை விட்டு வெளியேற முயற்சித்துள்ள நிலையில், அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார். எனினும், அமெரிக்கா அதனை நிராகரித்துள்ளது.
இதேவேளை, 9ஆம் திகதி போராட்டங்களிற்கு சற்று முன்னதாக ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்ட கோட்டாபய, வளைகுடா நாடொன்றிற்கு தப்பிச் செல்ல முற்சித்த போதும், விமான நிலைய ஊழியர்களின் எதிர்ப்பு காரணமாக அவரால் வெளியேற முடியவில்லையென AFP இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியும், மனைவியும் நாட்டை விட்டு வெளியேற விமான நிலையத்தில் குடிவரவு ஊழியர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். குடிவரவு அதிகாரிகள் விஐபி பகுதியில் தங்கள் சேவைகளை நிறுத்தியுள்ளனர்.
“ஜனாதிபதியும் அவரது மனைவியும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அழைத்துச் செல்லக்கூடிய நான்கு விமானங்களைத் தவறவிட்ட பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை அடுத்துள்ள விமானப்படை தளத்தில் இரவைக் கழித்தனர்” என்று AFP தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.