இலங்கை மின்சார சபையின் தலைவர் அண்மையில் கோப் குழுவில் தெரிவித்திருந்ததையும், அதன் பின்னர் அவர் தெரிவித்த மறுப்புக்களையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் முன்னாள் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோப் விசாரணையில், மன்னார் காற்றாலை மற்றும் சூரிய சக்தி திட்டத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் அழுத்தம் கொடுப்பதாக ஜனாதிபதி தமக்கு அறிவித்ததாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்எம்சி பெர்டினாண்டோ கூறினார்.
ஜனாதிபதியின் மறுப்பைத் தொடர்ந்து, கோப் குழுவில் தாம் தெரிவித்த கருத்துக்களுக்கு மன்னிப்புக் கோரிய மின்சார சபையின் தலைவர், எதிர்பாராத அழுத்தங்கள் மற்றும் உணர்ச்சிகள் காரணமாக இந்தியப் பிரதமர் என்ற வார்த்தையை குறிப்பிட நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும், அது முற்றிலும் தவறானது என்றும் கூறினார்.
பாராளுமன்ற நடவடிக்கைகளை நன்கு அறிந்த இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ இவ்வாறான பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிட முடியாது என கோப் குழுவின் முன்னாள் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
பெர்டினாண்டோ இதற்கு முன்னரும் கோப் குழுவில் ஆஜராகியுள்ளதாகவும், தனது பொறுப்புகளை நன்கு உணர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மன்னார் காற்றாலை மற்றும் சூரிய சக்தித் திட்டம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோவின் சாட்சியங்களும் எழுத்துப்பூர்வமாக உள்ளதாக ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
எனவே, கோப் விசாரணையின் போது அவர் தவறு செய்ததாக அதிகாரிகள் நம்பினாலும் கூட, இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒரே கூற்றை மின்சார சபையின் தலைவர் கூற முடியாது என்றார்.
இது பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற சிறப்புரிமையை மீறுவதுடன் பொதுமக்களை ஏமாற்றும் முயற்சி என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
எனவே, சபாநாயகர் அல்லது நிதியமைச்சின் செயலாளர் இந்த விவகாரம் குறித்து உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.