பிளாஸ்டிக்கை உண்டு உயிர்வாழும் புழுக்களை அவுஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்மூலம் உலகில் பிளாஸ்டிக் மறுசுழற்சியில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் .
Superworms என்று அழைக்கப்படும் இந்தவகைப் புழுக்கள் பிளாஸ்டிக்கை செரிக்க உதவும் Enzyme எனப்படும் செரிமான நொதிப்பொருளைத் தன் உடலில் கொண்டுள்ளதாக நம்புகின்றனர்.
இந்தப் புழுக்கள் ஒரு சிறிய மறுசுழற்சி ஆலை போன்று செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
முதலில் பொலிஸ்டிரீனை (Polystyrene) வாயால் சிறு துகள்களாக்கி விழுங்குகிறது. அதன் வயிற்றிலுள்ள பக்டீரியாக்களுக்கு அதை உணவாக வழங்குகிறது.
குயின்ஸ்லந்து பல்கலைக்கழகக் குழுவினர் மூன்று வாரங்கள் புழுக்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.
ஆய்விற்காக எடுத்துக்கொண்ட புழுக்களுக்கு வெவ்வேறு உணவை அளித்தனர். பிளாஸ்டிக்கைச் சாப்பிட்ட புழுக்கள் எடை அதிகரித்துக் காணப்பட்டன
Superworm புழுக்களின் குடலில் உள்ள பல நொதிகள் பிளாஸ்டிக்கைச் சிதைக்கும் திறன் கொண்டிருப்பதைக் குழு கண்டறிந்தது.
புழுவின் குடலில் உள்ள நொதிகள் பற்றிய ஆராய்ச்சி மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்த ஆராய்ச்சி வெற்றிபெற்றால் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வது மிக எளிது. பிளாஸ்டிக் பொருள்களைச் சிறு துண்டுகளாக உடைத்து, பிறகு நொதியுடன் சேர்த்துச் சிதைக்கும் முறையைச் செயல்படுத்தலாம் என ஆய்வாளர்கள் கூறினர்.
உலகளவில் இதற்குமுன் பிளாஸ்டிக்கை உடைக்க பக்டீரியா, பூஞ்சைகளைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.
தற்போது புழுக்களைக்கொண்டும் பிளஸ்டிக்கைச் சிதைக்கும் ஆராய்ச்சியில் வெற்றிகண்டுள்ளனர் ஆய்வாளர்கள்.