முல்லைத்தீவு, வட்டுவாகலில் பொதுமக்களின் காணிகளை கடற்படையின் தேவைக்காக சுவீகரிப்பதற்காக, அளவீடு செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி இன்று (7) தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வட்டுவாகல், கோட்டாபய கடற்படை தளம் அமைந்துள்ள காணிகளில், பொதுமக்களிற்கு சொந்தமான காணிகளும் உள்ளன.
இந்த காணிகளை நிரந்தரமாக சுவீகரித்து, கடற்படை தளம் அமைப்பதற்கான முயற்சியில் நீண்டகாலமாக கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். எனினும், காணி அளவீட்டை பொதுமக்கள் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடற்படை முகாம் அமைந்துள்ள காணிகளிற்கு சொந்தமான சிலர், தமது காணிகளை கடற்படையினருக்கு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு, கோட்டாபய கடற்படை தளத்திற்கு காணி சுவீகரிப்பதற்கான அளவீடு தடுத்து நிறுத்தப்பட்டது- 1 pic.twitter.com/OKfySnhHQD
— Pagetamil (@Pagetamil) June 7, 2022
இரண்டு சிங்களவர்கள், ஒரு சீனர், மற்றும் சில உள்ளூர் மக்கள் காணிகளை கையளிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்த காணிகளை அளவீடு செய்ய கடந்த மே மாதம் 10ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், அன்று ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்ததால், அளவீடு நடைபெறவில்லை.
இன்று அளவீடு நடக்கவிருந்தது. எனினும், ஏனைய காணி உரிமையாளர்களிற்கு அது பற்றி அறிவிக்கப்படவில்லை. இன்று காணி அளவீட்டிற்காக நில அளவை திணைக்களத்தினர் வந்த போது, அரசியல் பிரமுகர்களும், பிரதேசவாசிகளும் கூடி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, நில அளவைத்திணைக்களத்தினர் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
முன்னாள் வடக்கு விவசாய அமைச்சர் க.சிவநேசன், வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர்எஸ்.சஜீவன், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகிய அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் இன்றைய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
