மே மாதம் 9ஆம் திகதி அலரி மாளிகைக்கு வெளியேயும் காலி முகத்திடலிலும் இடம்பெற்ற அமைதியின்மை மற்றும் வன்முறை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலேகா உள்ளிட்ட 11 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று (01) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன கல்வி சேவைகள் சங்கத்தின் பிரதிநிதி வசந்த ஹடபாங்கொடவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்த வழக்கில் சந்தேகநபர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சுயதொழில்புரிவோர் சங்கத்தின் தலைவர் மஹிந்த கஹந்தகம மற்றும் மேலும் இருவர் பெயரிடப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்து, முன்னாள் அமைச்சர்கள் உட்பட 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கிய பணிப்புரையை அடுத்து குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.




