கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற யுத்தமானது சரியான வழியில் வெல்லப்பட்டதாக நான் நினைக்கவில்லை.அதாவது உள்நாட்டு யுத்தம் அல்லது பிரச்சினை என்றால் அது ஒரு பேச்சுவார்த்தை மேசையில் தான் முடிந்திருக்க வேண்டும்.இந்த போரின் முடிவு சமாதான முறையில் நிறைவிற்கு கொண்டு வரவில்லை. பெரும் அழிவுகளுடன் தான் நிறைவடைந்தது என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை (19) நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்ததாவது.
வட கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சராக இருந்த வரதராஜ பெருமாள் காலத்தில் ஒரு உறுப்பினராக இருந்துள்ளேன். அதுமாத்திரமன்றி வரதராஜ பெருமாள் அவர்கள் தமிழீழ பிரகடனம் செய்த போது வெளிநடப்பு செய்த குழுவிலும் நான் அங்கம் வகித்திருந்தேன். அதாவது இந்த நாட்டை பிரிப்பதற்கு ஒருபோதும் நாங்கள் உடன்பட மாட்டோம் என அப்போது நாம் வெளியேறி இருந்தோம். இந்நிலையில் பின்னர் அங்கு பல பிரச்சினைகள் எழுந்தமையினால் நாங்கள் ஐ.பி.கேயின் உதவியுடன் விசேட விமானத்தில் இரத்மலான விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டோம்.
மேலும் விடுதலைப்புலிகள் ஒரு இயக்கமாக இருந்தாலும் அந்த இயக்கத்தில் இருந்தவர்கள் விடுதலை புலிகள் என்ற உயரிய சிந்தனைகளில் இருந்தார்களா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அதாவது விடுதலை புலிகளின் உயர் மட்டத்தலைவர்கள் என கூறப்படுவோர் தற்போது கூட சிங்கள கட்சிகளின் உயர்பதவிகளில் வந்து இருக்கின்றார்கள். இவ்வாறானவர்களும் விடுதலைப்புலிகளில் கடந்த காலங்களில் அங்கம் வகித்துள்ளார்கள் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள முடிகின்றது.
ஆகவே விடுதலைப்புலிகள் என்ற விடயம் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகும். கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற யுத்தமானது வெல்லப்பட்டது என்பதற்காகவே ராஜபக்ஸக்களை மக்கள் ஆட்சிக்கு கொண்டு வருகின்றார்கள்.
இந்த யுத்தமானது வெளிநாடு ஒன்றுடன் செய்யப்படவில்லை. இலங்கை பிரஜைகளுடன் தான் இலங்கை அரசாங்கம் யுத்தம் செய்தது உண்மையாகும். இந்த யுத்தமானது சரியான வழியில் வெல்லப்பட்டதாக நான் நினைக்கவில்லை. அதாவது உள்நாட்டு யுத்தம் அல்லது பிரச்சினை என்றால் அது ஒரு பேச்சுவார்த்தை மேசையில் தான் முடிந்திருக்க வேண்டும். ஒரு போர்க்களத்தில் நின்று கொண்டு பொதுமக்களை இராணுவம் சுட்டுத்தள்ளி அல்லது ஒரு விடுதலை இயக்கம் இராணுவத்தை சுட்டுத்தள்ளுவதை ஒரு காலமும் யுத்தமோ சமாதானமோ என்று கூற முடியாது.
இந்த போரின் முடிவு சமாதான முறையில் நிறைவிற்கு கொண்டு வரவில்லை. பெரும் அழிவுகளுடன் தான் அவ்யுத்தம் நிறைவடைந்தது. உதாரணமாக தென்னாபிரிக்காவில் 243 இயக்கங்கள் போர் இட்டு வந்திருந்தன. அதில் வெள்ளையர் கறுப்பர் குழு மோதலும் இடம்பெற்றிருந்தது. நெல்சன் மண்டேலா அந்த காலகட்டத்தில் வெஸ்மன் ரூட்டோ போன்றவரகள் இப்போராட்ட இயக்கங்களுடன் எத்தனையோ பேச்சுவார்த்தைகளை நடாத்தி 11 குழுக்களாக மேற்குறித்த இயக்கங்களை ஒருங்கிணைத்தனர். இவ்வாறு 11 குழுக்களுடனும் பின்னர் அவர்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டு பிணக்குகளை தீர்த்து வைத்தனர்.
இதனால் தான் அவருக்கு கூட நோபல் பரிசு கிடைக்கப்பெற்றிருந்தது. இந்த நாட்டிலும் ஒரு இணக்கப்பாட்டுடன் நடந்து முடிந்த யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்திருந்தால் இவர்களுக்கும் நோபல் பரிசு கிடைக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். ஆனால் இந்த யுத்தமானது அரைகுறையாக நிறைவடைந்து விட்டது என்பதே உண்மையாகும். சமாதான மேசையில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு இந்த யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்படவில்லை. மாறாக பெரும் அழிவு யுத்த அவலத்துடன் தான் இந்த யுத்தம் அரைகுறையாக நிறைவடைந்துள்ளது என்பதை நான் பார்க்கின்றேன் என்றார்.
-பா.டிலான்-