அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற போது, அவருக்கு சிகிச்சையளிக்க வைத்தியர் மறுத்துவிட்டார்.
இதையடுத்து, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்.
நாரஹேன்பிட்டி லங்கா வைத்தியசாலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
தைரோய்ட் பிரச்சினைக்கு சிகிச்சை பெறவே அமைச்சர் பிரசன்ன, லங்கா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். போஷாக்கு நிபுணர் டொக்டர் ரணில் ஜயவர்தனாவினாவிடம் அவர் சிகிச்சை பெறவிருந்தார்.
பிரசன்ன ரணதுங்க இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் டொக்டர் ரணில் ஜயவர்தனாவினாவிடம் சிகிச்சை பெற்றுள்ளதுடன், நேற்று அவர் மூன்றாவது முறையாக சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
‘பிரசன்ன ரணதுங்க என்ற நோயாளி சிகிச்சைக்காக காத்திருக்கும் விடயம் தெரிந்ததும், அவர் முன்பதிவிற்காக செலுத்திய பணத்தை மீள கையளித்து அவரை வைத்தியசாலையிலிருந்து அனுப்பி வையுங்கள் என்றேன்’ என டொக்டர் ரணில் ஜயவர்தனா தெரிவித்தார்.
தான் சிரமப்பட்டு வைத்தியசாலைக்கு வந்ததாகவும், தனது வாகனத்திற்கு எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் நண்பரின் வாகனத்தில் வந்ததாகவும் தெரிவித்திருந்தார். அண்மைக்காலமாக வைத்தியர்களை கூட பிரசன்ன இழிவுபடுத்தியதாகவும், அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் நாடு துயரத்தில் உள்ளதாகவும், அரசியல்வாதிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை என தனிப்பட்ட முறையில் தீர்மானித்துள்ளதாகவும் ரணில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.