வவுனியா, ஓமந்தைப் பகுதியில் விசேட அதிரடிப் படையினரின் சுற்றி வளைப்பில் காட்டுப் பகுதியில் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டு ஓமந்தைப் பொலிசாரிடம் நேற்று (01) மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா, ஓமந்தை, கோதாண்டர் நொச்சிக்குளம் காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த பகுதியில் விசேட அதிரடிப் படையினர் விசேட சோதனையை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது அங்கு கத்தி, வாள் உ ள்ளிட்ட ஆயுதங்களுடன் பலர் ஒன்று கூடி அவ் ஆயுதங்களால் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் இருந்த நிலையில் 16 பேர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
அவர்களிடம் இருந்து கத்தி, வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஓமந்தைப் பொலிசாரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த நபர்கள் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.