`இரவின் நிழல்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்த சம்பவம் சர்சையை ஏற்படுத்தியது.
பார்த்திபன் இயக்கத்தில் உருவான `இரவின் நிழல்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில், படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டு, முதல் பாடலை வெளியிட்டார். நிகழ்வின்போது மைக் சரியாக வேலைச் செய்யவில்லை என பார்த்திபன் வேகமாக மைக்கை முன்வரிசையில் தூக்கி வீசியெறிந்ததால் நிகழ்வில் சில நொடிகள் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து பார்த்திபன் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டார். மைக் வேலை செய்யாததால் கோபம் அடைந்துவிட்டேன். இது நிச்சயம் அநாகரிகமான செயல். என்னை மன்னிக்கவும் என்று அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, “பார்த்திபனின் `இரவின் நிழல்` திரைப்படம் மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பாவில் வெளியாகி இருந்தால் உலகமே கொண்டாடி இருக்கும். தமிழ் திரைக்கலைஞர்களிடம் பல திறமைகள் உள்ளன. நாம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்” என்று பேசினார்.
நிகழ்வில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கரன் கார்க்கி, இயக்குனர் சசி, கரு பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.