ஆபிரிக்க யானையின் முடியில் இருந்து தயாரிக்கப்பட்ட தங்க வளையல்கள் மற்றும் குழந்தைகளிற்கான வளையல்களை விற்பனை செய்த நகைக்கடை உரிமையாளரான தமிழர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
40 வயதான மகாராஜ் சிவசுந்தரத்திற்கு, 8,400 பவுண்ஸ் அபராதம் விதிக்கப்பட்டது.
வடமேற்கு லண்டனில் உள்ள வெம்ப்லியில் உள்ள ஒரு கடையில், அழிந்து வரும் உயிரினங்களின் பாகங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட நகைகள் விற்பனைக்காக விளம்பரம் செய்யப்பட்டு வந்தது.
மர்மமான கருப்பு இழைககளைக் கொண்ட தங்க மோதிரங்கள் மற்றும் வளையல்களை போலீசார் கண்டுபிடித்தனர்.
யானை முடிகளை பயன்படுத்தி அவை தயாரிக்கப்பட்டிருந்தன. உடல் ஆரோக்கியம், பாதுகாப்பு, குழந்தை பாக்கியம், செல்வம் போன்றவற்றிற்காக யானை முடி மோதிரம் அணியலாமென நம்பியவர்கள் பலர் அந்த நகைக்கடைக்கு வந்துள்ளனர்.
மாநகர போலீசார் 2017ல் கடையை கண்டுபிடித்து விசாரணை நடத்தினர்.
யானை முடி நகைகளை சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யவில்லையென்பது தெரிய வந்தது.
ஹெர்ட்ஃபோர்ட்ஷையரின் புஷேயைச் சேர்ந்த சிவசுந்தரம், இந்த நேரத்தில் கைது செய்யப்படவில்லை, ஆனால் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
ஸ்காட்டிஷ் விவசாய ஆய்வகத்திற்கான அறிவியல் மற்றும் ஆலோசனையின் தடயவியல் மூலம் இழைகள் டி.என்.ஏ சோதனைக்குட்படுத்தியதில், அவை ஆபிரிக்க யானை முடிகள் என கண்டுபிடிக்கப்பட்டது.
சிவசுந்தரம் அழிந்து வரும் உயிரினங்களிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் அடங்கிய பொருட்களை விற்பனை செய்ததாக ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்த வழக்கின் தீர்ப்பு ஹாரோ கிரவுன் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. சிவசுந்தரம் குற்றவாளியென அறிவிக்கப்பட்டு, 8,400 பவுண்ஸ் அபராதம் விதிக்கப்பட்டது. 3,500 பவுண்ஸ் செலவாகவும், 170 பவுண்ஸ் கூடுதல் கட்டணமாகவும் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.




