24 மணி நேரத்தில் தீர்வு கிடைக்காவிட்டாலும், மிக விரைவில் வரிசைகள் இல்லாத நிலைமை உருவாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தை ஆரம்பித்து வைத்து விசேட உரையொன்றை ஆற்றிய மகிந்த ராஜபக்ச, நெருக்கடிகளை சமாளிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
அரசியல் ரீதியில் இது ஆழம் குறைந்த நீரில் மீன்பிடிப்பதற்கான சந்தர்ப்பம் அல்ல. அரசாங்கமாகிய நாம் எமது பொறுப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நட்பு நாடுகளும் உதவி செய்து வருகின்றன.
குறுகிய காலத்தில் நிலைமையைச் சமாளித்து, நீண்டகாலத்தில் இத்தகைய நெருக்கடியைத் தடுக்க அடித்தளம் அமைக்க வேண்டும். இதற்கு எதிர்ப்புக்கு அப்பாற்பட்ட தலையீடு தேவைப்படுகிறது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.
காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம்.அவர்களது கருத்துக்களையும் கேட்க தயாராக உள்ளோம்.எங்கள் முயற்சிக்கு அனைவரும் ஆதரவு அளிப்பார்கள் மக்கள் ஆசிர்வதிப்பார்கள் என நம்புகிறோம் என்றார்.