புத்தளம், மதுரங்குளி பிரதேசத்தில் இன்று (1ம் திகதி) காலை முதல் வாகனங்களுக்கு டீசல் வழங்குமாறு கோரி வாகன சாரதிகள் வீதி மறியலில் ஈடுபட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரங்குளிய கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையிலும், நகரின் மத்தியில் இரண்டு இடங்களிலும் கடந்த 18ஆம் திகதி முதல் சுமார் 500 பேர் வரையில் எரிபொருளுக்காக காத்திருக்கிறார்கள்.
நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் வழங்காததைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புத்தளம்-கொழும்பு வீதியின் மதுரங்குளியாவில் இருந்து போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியை மூடியதாலும், மதுரங்குளி நகரில் அதிகளவான கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாலும் நகரம் அமைதியாக காணப்பட்டது.
புத்தளம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எம்.ஜெயமஹா உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மூடப்பட்ட வீதியை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
மதுரங்குளி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் விநியோகம் செய்யப்பட்டதன் பின்னர் வீதி திறக்கப்படும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் இருந்து கொழும்பு மற்றும் புத்தளம் நோக்கி பயணித்த பெருமளவிலான வாகனங்கள் காத்திருப்பதை காணமுடிந்தது.