அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பயணங்களிற்கு பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவிக்கையில், எரிபொருள் பிரச்சினை உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பிரதமர் மற்றும் வெளிநாட்டு அரச தலைவர்களின் விஜயங்களுக்கு ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை வழங்கப்படும் என தெரிவித்தார்.
ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்கள் முன்னர் இலங்கை விமானப்படையால் அமைச்சரவை மற்றும் அமைச்சரவை அல்லாத அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டன.
இதேவேளை, முன்னாள் அமைச்சர்கள் பலர் தமது விமானப் பயணத்திற்காக இலங்கை விமானப்படைக்கு செலுத்த வேண்டிய 10 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இதுவரை செலுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.