முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் இருந்து மாயமான இரண்டு பதின்ம பராய சிறுமிகளும் நேற்று மீட்கப்பட்டனர்.
பேஸ்புக் காதலனை நம்பி வீட்டை விட்டு புறப்பட்ட இரண்டு சிறுமிகளும், இரண்டு வெவ்வேறு இடங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் இலக்காகியுள்ளனர்.
புதுமாத்தளன் பகுதியை சேர்ந்த 14 வயதான இரண்டு சிறுமிகள் கடந்த 16ஆம் திகதி காணாமல் போயிருந்தனர். சிறுமிகளின் பெற்றோர், முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று (18) இரவு புதுக்குடியிருப்பு பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இரண்டு சிறுமிகளின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கையையடுத்து பொலிசார் அவர்களை விசாரணை செய்ததில், அவர்களே மாயமான புதுமாத்தளன் சிறுமிகள் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறுமிகளில் ஒருவருக்கு பேஸ்புக் மூலம் காதல் மலர்ந்துள்ளது. மட்டக்களப்பு, செங்கலடி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவனே காதலன்.
தன்னிடம் வருமாறு காதலன் அழைத்ததையடுத்து, கடந்த 16ஆம் திகதி நண்பர்கள் இருவரும் செங்கலடி புறப்பட்டனர்.
தனியார் கல்வி நிறுவனத்திற்கு செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு புறப்பட்டவர்கள், மிதிவண்டியை பற்றைக்குள் மறைத்து வைத்து விட்டு, பேருந்தில் மட்டக்களப்பு, செங்கலடிக்கு சென்றுள்ளனர்.
செங்கலடி காதலனின் வழிகாட்டலில், பேருந்தில் சென்ற அவர்களை, செங்கலடியில் வைத்து காரில் ஏற்றினான் பேஸ்புக் காதலன்.
தனது பேஸ்புக் காதலியுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட இளைஞன் நேற்று முன்தினம், இரண்டு சிறுமிகளையும் காரில் ஏற்றி வந்து, யாழ்ப்பாணம் செல்லும் பேருந்தில் ஏற்றி, வீட்டுக்கு அனுப்பியுள்ளான்.
சிறுமிகள் இடம் தெரியாமல் யாழ் நகரை வந்து சேர்ந்தனர்.
இரவாகிய சமயத்தில் அவர்கள் நகரில் சுற்றித்திரிந்தனர். இரவு வேளையில் பான்சி கடை ஒன்றில் பொருட்களை வாங்கிய வேளை, அவர்களிற்கு உதவிசெய்வதாக கூறி இரண்டு இளைஞர்கள் சிறுமிகளை அழைத்துக்கொண்டுசென்று வீடு ஒன்றில் தங்கவைத்து மற்றைய சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்கள்.
நேற்று இரண்டு சிறுமிகளையும் யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு பேருந்தில் ஏற்றி அனுப்பியுள்ளனர்.
நேற்று இரவு புதுக்குடியிருப்பை வந்தடைந்த போதே, பொலிசார் சிறுமிகளை மீட்டனர்.
சிறுமிகள் முல்லைத்தீவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




