நல்லெண்ண சமிக்ஞையை ஜனாதிபதி வெளிப்படுத்தாவிட்டால், 25ஆம் திகதி ஜனாதிபதியை சந்திப்பதில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) முடிவு செய்துள்ளது.
ரெலோவின் தலைமைக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திக்க நேரமொதுக்கும்படி இரா.சம்பந்தன் பல முறை கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், நீண்ட காலமாக அதை கண்டுகொள்ளாமலிருந்த ஜனாதிபதி, சில தடவைகள் நேரமொதுக்கி, இறுதி நேரத்தில் ‘இன்று போய் நாளை வா’ பாணியில் அனுப்பி வைத்தபடியுள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் 25ஆம் திகதி தம்மை வந்து சந்திக்கும்படி, கூட்டமைப்பினருக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அழைப்பை ஏற்பதில்லையென ரெலோ ஏற்கனவே அறிவித்திருந்தது.
அரசியல் கைதிகள், காணி அபகரிப்பு, தொல்லியல் ஆக்கிரமிப்பு, பயங்கரவாத தடைச்சட்டம், அரசியல் தீர்வின்மையென தமிழ் மக்கள் பல நெருக்கடிகளுடன் இருக்கும் போது, எந்த நல்லிணக்க சமிக்ஞையும் காண்பிக்காமல், வெறுமனே பேச்சுக்கு அழைப்பது ஏமாற்று வித்தையென்பதை ரெலோ சுட்டிக்காட்டியது.
தற்போது பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் அரசு, அதிலிருந்து மீள உதவி கோரும் போது, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தமிழ் மக்கள் அரசியல் தீர்வு குறித்து சுட்டிக்காட்டிள்ளது. சர்வதேச சமூகத்தை ஏமாற்ற கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதை போன்ற தோற்றத்தை அரசு காண்பிக்க முயற்சிக்கிறது.
கடந்த நல்லாட்சி அரசிலும் இரா.சம்பந்தன், சுமந்திரன் அணி ஏனைய தரப்பின் கருத்துக்களை கணக்கிலெடுக்காமல் தன்னிச்சையாக நடந்து, அந்த காலத்தை வீணடித்ததுடன், தமிழ் தேசியத்தை வீரியமிழக்க செய்தனர்.
அதேபோன்ற தவறை அவர்கள் மீள செய்ய எத்தனித்தாலும், கடந்த காலத்தை போல மௌனமாக அதை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என ரெலொ அதிரடியாக முடிவு செய்து, ஜனாதிபதி நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தாமல் பேச்சில் கலந்து கொள்ள மாட்டோம் என அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று ரெலோவின் தலைமைக்குழுவிலும் இதே முடிவே எடுக்கப்பட்டது.
25ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி நல்லெண்ண சமிக்ஞையை காண்பிக்கா விட்டால், கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை, 24ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளமன்ற குழுக்கூட்டத்தில் இதனை அறிவிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 23ஆம் திகதி ஜனாதிபதி அழைத்த சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்வதென ரெலோ தீர்மானித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி பற்றிய அபிப்பிராயங்களை வழங்கும்படி, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளிற்கு ஜனாதிபதி செயலகம் அழைப்பு அனுப்பியுள்ளது. ரெலோவிற்கும் அந்த அழைப்பு அனுப்பப்பட்டது.
பொருளாதார நெருக்கடி பற்றிய அபிப்பிராயம் கோரப்பட்டுள்ளதால், அன்றைய தினம் கூட்டத்தில் கலந்து கொண்டு, அரசின் தவறான முகாமைத்துவத்தாலேயே பொருளாதார சரிவு ஏற்பட்டது என தெரிவிப்பதென முடிவானது.




