கோதுமை மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பேக்கரி உற்பத்தி, உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளது.
இதனடிப்படையில் ஒரு இறாத்தல் பாண் ஒன்றின் விலை 20-30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இனிப்பு பணிஸ் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கமும் பல்வேறு பொருட்களின் விலைகளை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
மதிய உணவுப் பொதி ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
கொத்து விலை 10 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. துரித உணவுகள் ரூ. 5, 10 வரை உயர்த்தப்படும்.
இன்று முன்னதாக, கோதுமை மா சப்ளையர்களான செரண்டிப் நிறுவனமும், ப்ரிமாவும் தங்கள் தயாரிப்புகளின் விலைகளை உயர்த்துவதாக அறிவித்தன.
1 கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பிரிமா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.




