உக்ரைனில் கடந்த 11 நாட்களாக நடந்து வரும் ரஷ்ய இராணுவ நடவடிக்கை எதிர்பார்த்ததை விட, மெதுவாகவே நகர்ந்து வருகிறது. உக்ரைனின் விடாத, மூர்க்கமான எதிர்ப்பு இவ்வளவு அதிகமாக இருக்குமென ரஷ்யா எடைபோட்டிருக்காது. உக்ரைனின் எதிர்ப்பு ரஷ்யர்களை உண்மையில் திகைக்க வைத்துள்ளது.
என்றாலும், இந்த எதிர்ப்பு போரின் முடிவில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சொல்ல முடியாது. காரணம், அனைத்து மட்டங்களிலும் உக்ரைனை விட மிக வலுவானது ரஷ்யா.
உக்ரைன் தீவிர எதிர்ப்பை காண்பித்து, எதிர்பார்த்ததை விட மெதுவாக பிரதேசங்களை இழந்தாலும், அது தொடர்ந்து பிரதேசங்களை இழந்து வருகிறது என்பதே உண்மை.
உக்ரைனிற்குள் ரஷ்யப் படைகளின் விரைவான நகர்வை கட்டுப்படுத்துவது இரண்டு போராயுதங்கள். ஒன்று அமெரிக்க தயாரிப்பு இலகு ரக ஏவுகணையான சென் ஜவலின் (St. Javelin) மற்றும் துருக்கி தயாரிப்பான Bayraktar TB2 ஆளில்லாத ட்ரோன் விமானம்.
இந்த இரண்டு ஆயுதங்களுமே ரஷ்யாவிற்கு தலையிடியை கொடுத்து வருகிறது.
கடந்த 2018, 2019ஆம் ஆண்டுகளிலேயே இரண்டு ஆயுதங்களையும் உக்ரைன் வாங்கியது.
இதுவரை ரஷ்யாவின் 280 பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களை ஜவலின் ஏவுகணைகள் தகர்த்துள்ளன என்று போர்ச் செய்திகளை தொகுத்து எழுதி வரும் அமெரிக்க பத்திரிகையாளர் ஜாக் மர்பி தெரிவித்துள்ளார். இத்தகவலை அமெரிக்காவின் சிறப்பு செயல்பாட்டு அதிகாரி ஒருவர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக ஜாக் மர்பி செய்தி வெளியிட்டுள்ளார்.
இதுவரை 300 ஏவுகணைகளை செலுத்தியதில் 280 பீரங்கி, கவச வாகனங்கள் தகர்க்கப்பட்டுள்ளன. அதாவது 93 சதவீத அளவுக்கு துல்லியமான தாக்குதல்களை ஜவலின் ஏவுகணைகள் செய்துள்ளன.
அமெரிக்காவின் ராய்தியான் மிசைல்ஸ் அன்ட் டிஃபன்ஸ், லாக்ஹீட் மார்ட்டின் ஆகிய 2 நிறுவனங்கள் இந்த வகை ஏவுகணைகளைத் தயாரித்து அளிக்கின்றன.
பெரும்பாலான பீரங்கிகள், கவச வாகனங்களின் பக்கவாட்டுப் பகுதிகள் மிகுந்த பாதுகாப்புடனும், அதிக தடிமனுடனும் செய்யப்பட்டிருக்கும். ஆனால்அதன் மேற்பகுதியானது குறைந்தஅளவிலான தடிமனைக் கொண்டிருக்கும். இந்த வகை ஏவுகணைகள் கவச வாகனத்தின் மேற்பகுதியைத் தாக்கவல்லவை. அதனால்தான் இவரை 93 சதவீத அளவுக்கு இலக்கைத் துல்லியமாகத் தாக்குகின்றன என்று ஜாக் மர்பி தெரிவித்துள்ளார்.
இந்த வகை ஏவுகணைகளின் தாக்குதலைப் பார்த்த ரஷ்ய இராணுவம் தனது டி-72 ரக பீரங்கியை போர்க்களத்திலிருந்து திரும்பப் பெற்றுள்ளது” என்றார்.
உக்ரைனிய இராணுவத்தின் கூற்றுப்படி, ரஷ்ய இராணுவத் தொடரணிகள் மீது Bayraktar TB2 ஐப் பயன்படுத்தி குறைந்தது நான்கு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைனிய விமானப்படை திங்கள்கிழமை வெளியிட்ட வீடியோக்களில், ரஷ்யாவின் Buk தரையிலிருந்து ஏவப்படும் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புக்கள் இரண்டு அழிக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தலைநகர் Kyiv மற்றும் Zhytomyr பகுதிகளில் இந்த தாக்குதல்கள் நடந்தன. இது TB2 ஆளில்லாத விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்கள்.
போரின் முதல் நாளிலேயே உக்ரைனின் வான் கட்டமைப்பை செயலிழக்க வைத்து விட்டதாக ரஷ்யா அறிவித்தாலும், ரஷ்யாவின் பல தொடரணிகள் TB2 ட்ரோனால் அழிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை ட்ரோன்களை சிறிய பகுதிகளிலிருந்து பறக்க வைக்கலாமென்பதால், அவற்றை இதுவரை ரஷ்யாவால் கட்டுப்படுத்த முடியவில்லை.
உக்ரைன் போரில் மேற்கு நாடுகளின் பாத்திரம், ரஷ்யாவின் தாமதத்தில் இருந்து புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. உக்ரைனிற்கு மிகப்பெருமளவான ஆயுதங்களை அவர்கள் வழங்கி, ரஷ்யாவுடனான யுத்தத்திற்கு உசுப்பேற்றி விட்டுள்ளனர்.
அமெரிக்க மற்றும் உக்ரைனிய அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜனவரி 22 முதல் அமெரிக்கா உக்ரைனுக்கு கிட்டத்தட்ட 1,000 தொன் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை அனுப்பியுள்ளது. இதில் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், பதுங்கு குழிகளை உடைக்கும் ஏவுகணைகள், கையெறி குண்டுகள், குண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் ஆகியவை அடங்கும்.
இதுதவிர, யுத்தம் ஆரம்பித்த பின்னர், ஜேர்மன் சான்ஸ்லர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் 1,000 Panzerfaust டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் 500 ஸ்டிங்கர் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்தார். வியாழன் அன்று, ஜேர்மனி 2,700 விமான எதிர்ப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கான தனது ஆயுதக் கப்பல்களில் சேர்த்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரித்தானியா, இத்தாலி, லாட்வியா, லிதுவேனியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் ஆயுத ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக, அமெரிக்கா தயாரித்த ஸ்டிங்கர் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளன.
50 மில்லியன் டொலர் உதவிப் பொதியின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு ஏவுகணைகளை அனுப்புவதாக அவுஸ்திரேலியா அறிவித்தது. 13,000 அடி உயரத்தில் உள்ள விமானங்களை தாக்கக்கூடிய Piorun விமான எதிர்ப்பு அமைப்பை வழங்க போலந்து உறுதியளித்துள்ளது. பெல்ஜியம், கனடா, செக் குடியரசு, ஸ்லோவாக்கியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளும் ஆயுதங்களை அனுப்பியுள்ளன அல்லது அனுப்ப ஒப்புக் கொண்டுள்ளன.
நேட்டோவின் கூற்றுப்படி, 17 உறுப்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளன அல்லது வழங்க திட்டமிட்டுள்ளன.
“தற்காப்பு என்பது ஐ.நா. சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு உரிமையாகும், மேலும் அந்த உரிமையை நிலைநிறுத்த உக்ரைனுக்கு நட்பு நாடுகள் உதவுகின்றன” என்று நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.