திருகோணமலை – ஹபரணை வீதியில் காட்டு யானையை துன்புறுத்தும் வகையில் டிக் ரொக் காணொளி எடுத்த ஜீப் சாரதி வன ஜீவராசி அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு ரூ.200,000 அபராதம் விதிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஹபரணையில் காட்டு யானையை ரிக்ரொக் வாசியொருவர் தொல்லை செய்யும் காணொளி சில வாரங்களுக்கு முன்னர் சமூக ஊடகங்களில் மட்டுமன்றி சர்வதேச ஊடகங்களிலும் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
அந்த வீடியோவில், அந்த நபர் யானையை மிரட்டி பயமுறுத்தும் வகையில், வாகனத்தை யானைக்கு அருகில் ஓட்டிச் செல்வதைக் காணலாம். யானையை நோக்கி தனது வாகனத்தை செலுத்தியதுடன், அதன் மீது பிரகாசமான ஹெட்லைட்களை ஒளிரவிட்டார்.
யானை துன்புறுத்தப்படும் வீடியோ ருவிட்டரில் வெளியாகி கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
கெக்கிராவ பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் நேற்று கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.



