இன்னும் 10 வருடங்களுக்கு எந்த அரசியல் கட்சியினாலும் பொதுஜன பெரமுனவின் ஆட்சியை அசைக்க முடியாது என மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெரமுனவின் அமைப்பாளரும் மாவட்ட தமிழ் பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்தார்.
இந்த நாட்டை கொண்டு நடாத்தக்கூடிய சக்தி மகிந்த ராஜபக்ஸ குடும்பத்திற்கே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதல் தடவையாக பாரியளவிலான நிதியொதுக்கீட்டில் வீதியமைப்பு பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையிலிருந்த கிரான்-குடும்பிமலை வீதி மற்றும் இலுப்பையடிசேனை-05 ஆம் கட்டை சந்தி வரையிலான வீதிகளும் வேப்பவட்டுவான் வீதி ஆகியவற்றின் புனரமைப்பு பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் கீழ் ஒரு இலட்சம் கிலோமீட்டர் கிராமிய வீதிகள் மற்றும் பாலங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கிரான் பிரதேச செயலக பிரிவில் கிரான் பாலத்தில் இருந்து குடும்பி மலை வரை மற்றும் இலுப்படிச்சேனை சந்தியில் இருந்து கிரான் 5ஆம் கட்டை சந்தி வரையான 38 கிலோமீற்றர் வீதிகள் 1608 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கும் வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சமய வழிபாட்டுடன் நேற்று வியாழக்கிழமை (10) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கான அடிக்கல்லினை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேசங்களுக்குரிய அபிவிருத்தி குழு இணைத்தலைவர் பரமசிவம் சந்திரகுமாரினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதன்போது கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, 23 ஆம் படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜென்ரல் நலின் கொஸ்வத்த ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் செய்யப்படாமல் குண்டும் குழியுமாக மக்கள் பாவனைக்கு உகந்ததில்லாத நிலையில் காணப்பட்ட இவ் வீதியானது வெள்ள நேரங்களில் போக்குவரத்தில் தடை ஏற்பட்டு பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.
18 கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய கிரான் பிரதேசத்தில் 11 கிரமசேவகர் பிரிவுகள் படுவான் கரையிலும் 7 கிரம சேவகர் பிரிவுகள் எழுவான் கரையிலும் காணப்படுகிறது.
3500 மேற்பட்ட குடும்பங்கள், சுமார் 500000 ஏக்கர் வயல் நிலங்கள். 1 இலட்சத்திற்கு மேற்பட்ட கால்நடைகள், 11 பாடசாலைகள், 9 அரச நிறுவனங்கள் என கிரன் படுவான் கரை பிரதேசத்தில் அமைந்துள்ளன.
இவை அனைத்திற்கும் பிரதான போக்குவரத்து வீதியாக இவ்வீதியே அமைந்துள்ளது.
நாளாந்தம் விறகு எடுத்து விற்பனையில் ஈடுபட்டு தமது வாழ்வாதாரத்தினை மேற்கொள்ளும் கூலித் தொழிலாளர்கள் இவ் வீதியினை பயன்படுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்ததுடன் வீதி விபத்துக்களும் அடிக்கடி இடம்பெற்று வந்தது.
இந்த வீதியை புனரமைத்து தரும்படி வருடத்திற்கு ஒரு தடவை மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
எனவே மேற்படி நிலைமைகளை கவனத்தில் கொண்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவர் ப.சந்திரகுமார் இவ் வீதியினை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார். அத்துடன் கிரான் பாலத்தினையும் மீள் நிர்மானிப்பு கட்டுமான பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
-ருத்திரன்-



