தெஹிவளை கடற்கரையில் மாலத்தீவு மாணவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள, மாலைதீவு பொலிஸ் குழுவொன்றும் இலங்கை வந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு முதல் கொழும்பில் தங்கியிருந்து வர்த்தக முகாமைத்துவ உயர்கல்வி கற்று வரும் அஃப்ஹாம் நசீர் (23) என்ற மாணவரே சடலமாக மீட்கப்பட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை அவர் காணாமல் போயிருந்தார். பெப்ரவரி 6 ஆம் திகதி சனிக்கிழமை தெஹிவளை கடற்கரைப் பகுதியில் புகையிரதப் பாதைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டார்.
வழக்கு தொடர்பான உண்மைகளை தெளிவுபடுத்துவதற்கும், குடும்பத்திற்கு உதவுவதற்கான வழிகளை அடையாளம் காண்பதற்கும் பொலிஸ் குழுவொன்று திங்கட்கிழமை பிற்பகுதியில் இலங்கைக்கு சென்றதாக மாலைதீவு பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
6ஆம் திகதி தெஹிவளை கடற்கரைக்கு அருகில் இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இரண்டு சடலங்களிற்குமிடையில் 300 மீற்றர் இடைவெளி காணப்பட்டது. அதில், ஒருவர் அஃப்ஹாம் நசீர் என அடையாளம் காணப்பட்டார். தெஹிவளை கடற்கரைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அஃப்ஹாமினுடையது என அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உடலில் காயங்களும் காணப்பட்டன. அவரது சடலத்திற்கு அருகில் கத்தியொன்றும் காணப்பட்டது.
அஃப்ஹாமின் குடும்ப உறுப்பினர் ஒருவர் மாலைதீவு ஊடகங்களிற்கு தகவல் தெரிவிக்கையில், அஃப்ஹாமின் உடலில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கூறினார்.




