வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் தாதியர்கள் சம்பளப் பிரச்சனை உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தாதியர்கள் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்று (07.02) பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவாக வவுனியா வைத்தியசாலையிலும் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது
தற்போது ருபா 3000 ஆக உள்ள விசேட கடமைக்கொடுப்பனவை ரூபா 10000 ஆக உயர்த்துதல், மேலதிக நேர றேட் கணிக்கும் போது சம்பளத்தின் 1/80 ஆக கணக்கிடல், தொழில் வல்லுனர் பட்டதாரிகளுக்கு திருத்தியமைத்த சம்பள அளவுத்திட்டத்தை நிர்ணயத்துடன் தகுந்த பதவி வாய்ப்புக்களைக் கிடைக்கச் செய்தல், ஆசிரியர் சேவை சம்பள உயர்வின் மூலம் தாதிய சேவைக்கு ஏற்பட்டுள்ள சம்பள முரண்பாட்டை தீர்த்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகைளை முன் வைத்து இப் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
தாதியர்களின் இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் சேவை, நோயாளர் விடுதிகள், குருதிப் பரிசோதனை என்பனவற்றின் சேவைகளை பெற்றுக்கொள்வதில் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.