கட்டுவன்- மயிலிட்டி வீதிக்கு பதிலாக தனியார் காணிகளிற்குள்ளால் இராணுவம் அடாவடியாக அமைக்கும் வீதியை அனுமதிக்க முடியாது என்றும், அந்த வீதி அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலி வடக்கு பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின் அடிப்படையில், தனியார் காணிக்குள்ளால் வீதியமைக்கும் பணியை நிறுத்தும்படியும், அருகிலேயே இராணுவத்தின் பிடியில் உள்ள வீதியை விடுவிக்க வேண்டுமென்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் இராணுவத்தினருக்கு வலி வடக்கு பிரதேசசபை எழுத்து மூலம் அறிவிக்க தீர்மானித்துள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வீதியில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் 400 மீற்றர் நீளமான வீதியை விடுவிப்பதற்கு பதிலாக, உயர் பாதுகாப்பு வலயத்தின் எல்லையிலுள்ள தனியார் காணிகளிற்குள்ளால் புதிய வீதியொன்றை இராணுவத்தினர் அமைத்து வருகின்றனர்.
இதனால், பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், காணி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
காணி உரிமையாளர்கள் இது தொடர்பில் வலி வடக்கு பிரதேசசபையில் முறைிட்டுள்ளனர்.
இதைடுத்து, இன்று இடம்பெற்ற வலி வடக்கு பிரதேசசபை அமர்வில் இந்த விடயம் ஆராயப்பட்டது.
இதன்போது, பொதுமக்களின் காணிகளிற்குள்ளால் அடாவடியாக வீதியமைக்கும் பணியை உடனடியாக நிறுத்தும் படியும், அந்த வீதிப் பணியை அனுமதிக்க முடியாதென்றும், இராணுவத்தின் பிடியிலுள்ள வீதியை விடுவிக்குமாறும் குறிப்பிட்டு வீதி அதிகாரசபை மற்றும் இராணுவத்தினருக்கு எழுத்துமூலம் அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.