மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருணாகல் வரையான பகுதி மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.
இது தொடர்பான நிகழ்வு நேற்று (15) ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரின் தலைமையில் குருணாகல் – யக்கபிட்டியவில் நடைபெற்றது.
சமய அனுஷ்டானங்களுடன் நிகழ்வு ஆரம்பமானது. மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருணாகல் வரையான பகுதி 41 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். இது ஐந்து இடைமாறல் பகுதிகளைக் கொண்டது. மீரிகம, நாக்கலாகமுவ. தம்பொக்க, குருணாகல், யக்கபிட்டிய ஆகிய இடங்களில் இடைமாறல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நான்கு ஒழுங்கைகளைக் கொண்டதாக இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்து 5 வருட காலப்பகுதிக்குள் நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்த சகல விடயங்களையும் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
எனவே, அவர் மீது தொடர்ந்தும் நம்பிக்கை வைக்குமாறும் ஜனாதிபதி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பும் தேவை. மக்களுக்காக சேவையாற்றுவதற்கே தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்ததாகவும் ஜனாதிபதி கூறினார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாட்டின் வருமானம் குறைந்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதை உறுதிப்படுத்த தடுப்பூசிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
வளர்ந்த நாடுகளில் மில்லியன் கணக்கான உயிர்கள் கொரோனா வைரஸால் இழக்கப்படுவதாகக் கூறிய ஜனாதிபதி, பூஸ்டர் தடுப்பூசி யை பெறுமாறு பொதுமக்களை வலியுறுத்தினார்.
ஜனாதிபதி தேர்தலில் 6.9 மில்லியன் மக்கள் தனக்கு ஆதரவாக வாக்களித்த அதேவேளை, 5.2 மில்லியன் தனிநபர்கள் தனக்கு எதிராக வாக்களித்துள்ளதாக ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் இந்த குழு பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் பல்வேறு விமர்சனங்களை முன்வைப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
பல சவால்களுக்கு மத்தியிலும் அரசாங்கம் பொதுமக்களுக்கு பல சலுகைகளை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொவிட்-தொற்று காலத்தில் அரச துறை ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படவில்லை என ஜனாதிபதி கூறினார்.
நாட்டிலுள்ள பெரிய நிறுவனங்களின் வர்த்தகர்களை தான் சந்தித்ததாகக் கூறிய ஜனாதிபதி, வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 2021 ஆம் ஆண்டில் பெரும் இலாபத்தை ஈட்டியதாக அவர்கள் தமக்கு அறிவித்ததாகக் கூறினார்.
உள்ளூர் உற்பத்தியாளர்களை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் மூலம் குறுகிய காலத்திற்கு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் எனத் தெரிவித்தார்.
இரசாயன உரப் பாவனையை இடைநிறுத்துவதற்கான தீர்மானம் மக்கள் சார்பாக எடுக்கப்பட்ட கடினமான தீர்மானம் என்றார்.
பொலன்னறுவை மற்றும் அனுராதபுரத்தில் உள்ள குடிமக்களுக்கு சிறுநீரக நோய்கள் மற்றும் புற்றுநோய் தொடர்பான பல நோய்கள் இருப்பதாக அரச தலைவர் தெரிவித்தார்.
காலதாமதமான போதிலும் விவசாயிகள் தம்மீது நம்பிக்கை வைக்குமாறு கோரிக்கை விடுத்த ஜனாதிபதி, தாம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர் என்பதனால் அவர்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
நாட்டின் அபிவிருத்திக்கு முறையான போக்குவரத்துக் கட்டமைப்பு அவசியமாகும். இதன்படி அதிவேக நெடுஞ்சாலைகளையும் கிராமிய வீதிகளையும் தற்போதைய அரசாங்கம் அபிவிருத்தி செய்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இந்த நிகழ்வின் போது கூறினார்.
அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்கும் போது விமர்சனங்களை எதிர்கொண்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தடைப்பட்டன. எனினும்இ தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அதிவேக நெடுஞ்சாலைகளின் அபிவிருத்திப் பணிகளை மீண்டும் ஆரம்பித்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார். மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கு உரிய தீர்வு வழங்குவதற்கு ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் பொறுப்புடன் பணியாற்றுவதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.




