கொழும்பில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலும், கொழும்பில் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிக்கும் நோக்கிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து கொழும்பு நகரில் வசிக்கும் அனைத்து தற்காலிக குடியிருப்பாளர்களையும் பற்றிய தகவல்களை சேகரிக்கும் மூன்று நாள் நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பிக்க உள்ளனர்.
மேல்மாகாண சமூக பொலிஸ் பிரிவானது தேசிய பாதுகாப்பை பாதுகாத்தல், குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு என்ற தொனிப்பொருளின் கீழ் தகவல்களை சேகரிக்கும்.
அதன்படி, ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள், அரச அல்லது தனியார் வளாகங்கள், கட்டுமானத் தளங்கள் போன்றவற்றில் வசிக்கும் அனைத்து தற்காலிக குடியிருப்பாளர்களின் தகவல்களையும் பொலிஸார் சேகரிக்கவுள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் வீடுகள் மற்றும் வீதிகளுக்குச் செல்லும் சமூக பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் இருந்து, வீடுகளிலோ அல்லது வேறு இடங்களிலோ தற்காலிக குடியிருப்பாளர்கள் வசிக்கும் பட்சத்தில், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலிருந்து படிவத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
குறித்த பகுதியில் தற்காலிகமாக வசிப்பவர்கள் குறித்த சரியான தகவல்களை உள்ளீடு செய்து உரிய பொலிஸ் உத்தியோகத்தர்களிடமோ அல்லது சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்திலோ பொதுமக்கள் ஒப்படைக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.




