யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபை முன்றலில் பிரதேச சபை செயலாளரை அச்சுறுத்தியவரை கைது செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட அக்கரை பகுதியில் சட்டவிரோதமாக மதில் அமைக்கப்படுவது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் பார்வையிட செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் அவ்விடத்திற்கு சென்றுள்ளனர்.
வெவளிநாட்டிலிருந்து வந்த ஒருவரே காணி வாங்கி, அனுமதி பெறாமல் மதில் கட்டினார். மின்சார கம்பத்தையும் தனது காணிக்குள் வைத்து மதில் கட்டியதாக முறையிடப்பட்டிருந்தது.
பிரதேசசபை செயலாளர், மற்றும் உத்தியோகத்தர் அங்கு சென்ற போது, மதில் கட்டிய வெளிநாட்டவர் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார். செயலாளரை அச்சுறுத்தி, அவரது கைத்தொலைபேசியை பறித்து சேதமாக்கியிருந்தார்.
இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது. எனினும், பொலிசார் உரிய நடவடிக்கையெடுக்கவில்லை, அச்சுறுத்தல் விடுத்தவர் கைது செய்யப்படவில்லையென தெரிவித்து ஊழியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, இன்று நண்பகல் பொலிசார் இந்த அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.




