இந்த தலைப்பை படித்த போது உங்களிற்கு கடுமையான அதிர்ச்சியேற்படலாம். இப்பொழுதும் தனது அலுவலகத்தில் வருடா வருடம் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு நிகழ்வை அனுட்டித்து, புகைப்படங்களை வெளியிட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இப்படி செயற்பட்டிருப்பாரா என நீங்கள் யோசிக்கக்கூடும்.
அன்ரன் பாலசிங்கத்தை, சிறிதரன் மூடிய அறைக்குள் திட்டிய விடயம் உண்மைதான். ஆனால், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தை அவர் திட்டவில்லை. தனது அன்ரன் பாலசிங்கத்தையே திட்டினார்.
கடந்த பொதுத்தேர்தலில் எம்.ஏ.சுமந்திரனும், சி.சிறிதரனும் ‘அண்ணன்- தம்பி’யாக இணைந்து வாக்குக் கேட்டனர். சிறிதரனின் நெருங்கிய வட்டத்திலிருந்தவர்கள் மத்தியிலும் அது அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆதரவாளர்கள் பலரும் கேள்வியெழுப்பினார்கள். அப்போதுதான் சிறிதரன் அரிய அரசியல் விளக்கமொன்றை அளித்திருந்தார்.
வடமராட்சி கிழக்கில் நடந்த கூட்டமொன்றில், ‘அன்ரன் பாலசிங்கத்திற்கு பின்னர் எமக்கு எல்லாம் அவர்தான்’ என்ற சாரப்பட, சுமந்திரன் எம்.பியை விதந்தோதியுள்ளார்.
‘அது வேற வாய்… இது நாற வாய்’ என்ற வடிவேலுவின் நகைச்சுவை காட்சியைப் போல, அன்ரன் பாலசிங்கமென விதந்தோதிய அதே வாயினாலேயே, தனது அன்ரன் பாலசிங்கத்தை திட்டியும் தீர்த்துள்ளார்.
இது நடந்தது, இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டத்தில்.
கடந்த டிசம்பர் 21ஆம் திகதி கொழும்பில், இரா.சம்பந்தனின் வீட்டில் தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டம் நடந்தது. 22ஆம் திகதி தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்வது பற்றிய முடிவெடுக்கவே இந்த சந்திப்பு நடந்தது.
இந்த சந்திப்பின் போது, எம்.ஏ.சுமந்திரனின் அரசியல் நடவடிக்கைகள், ஆணுகுமுறைகள் குறித்து ‘கொட்டித் தீர்த்துள்ளார்’ சிறிதரன் எம்.பி.
முக்கியமாக, அமெரிக்க தூதரகம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு அமெரிக்க பயணமும், தனிப்பட்ட கனடா மற்றும் பிரித்தானியா பயணத்தையும் எம்.ஏ.சுமந்திரன் மேற்கொண்டார். அவை சாதாரணமான பயணங்களே. எனினும், அந்த பயணங்களின் மூலம் ‘அரசே ஆடப்போகிறது’ என்பதை போல சுமந்திரனின் சமூக ஊடக அணியும், சில பத்திரிகையாளர்களும் எழுதிக் கொண்டிருந்தனர்.
சுமந்திரனின் இந்த பயணத்தை கடுமையான விமர்சித்தார் சிறிதரன்.
கட்சிக்கு தெரியாமல், கூட்டமைப்பிற்கு தெரியாமல் அமெரிக்கா சென்றது மிகத்தவறானது என கடுமையான வார்த்தைகளில் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கனடாவிற்கு சென்ற சுமந்திரன், சாணக்கியனிற்கு என்ன நடந்ததென்பது உங்களிற்கு தெரியும். ‘அந்த சம்பவம்’ நடப்பதற்கு முன்னதாக, சுமந்திரன் உரையாற்றிய போது, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியை சாணக்கியனும், தானுமே நடத்தியதை போன்ற சாரப்பட உரையாற்றினார். ஆனால், அது தவறான கற்பிதம் என்பதை அப்போதே பலரும் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
அதனையும் சிறிதரன் சுட்டிக்காட்டினார்.
கனடாவில் நக்கீரன் போன்ற சில வயசாளிகளின் பேச்சை நம்பி சென்று, மூக்குடைந்து திரும்பியதாக கறாரான வார்த்தைகளில் சிறிதரன் விமர்சித்தார்.
‘அந்த கூட்டத்தில், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் நீங்களும் சாணக்கியனுமே நடந்ததை போல பேசியிருந்தீர்கள். நீங்கள் இருவருமா பேரணியில் கலந்து கொண்டீர்கள். பேரணியில் கலந்து கொண்ட மற்ற யாருமே உங்கள் கண்ணிற்கு படவில்லையா? நீங்கள் இருவருமே நடந்திருந்தால், யாருமே அதை திரும்பிப் பார்த்திருக்கமாட்டார்கள். அந்த பேரணியில் கட்சி பேதமின்றி அனைவரும் கலந்து கொண்டனர். அதனாலதான் வெற்றிபெற்றது. உங்கள் வழக்கமான பாணியில் அதற்கு நீங்கள் உரிமை கோருவதாலும் யாருக்கும் எந்த பிரச்சனையுமில்லை. ஏனெனில், மக்களிற்கு எல்லாம் தெரியும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சுமந்திரனின் அணுகுமுறையையும் கடுமையான விமர்சித்துள்ளார்.
கூட்டங்களில், சந்திப்புக்களில் ஆவேசமாகவும், அகங்காரத்துடனும் பேசுவதை நிறுத்துங்கள் என்றும் காரசாரமாக பேசினார்.
சிறிதரன் எம்.பி நீண்ட – கறாரான விமர்சனத்தை வைத்த போதும், சுமந்திரன் எம்.பி எந்த பதிலும் கூறாமல் இருந்து விட்டார்.