விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, குடும்பத்தரசிகள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாக்கியலட்சுமி.
இந்த தொடரில் கடந்த சில நாட்களாக பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது போலவும், அதற்கு பயந்து மாணவி தற்கொலை முயற்சி மேற்கொள்வது போலவும் காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.
இதுபோன்று காட்சிகள் ஒளிபரப்பாகுவது கண்டனத்துக்குரியது என சமூக ஆர்வலர் முகமது கோஷ் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
தற்கொலை செய்து கொள்வது தவறு, தற்கொலை எதற்கும் தீர்வாக அமையாது. இதனை நாம் பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டும்.
மாணவிகள் பாலியல் தொல்லைகளை சந்தித்தால் அதுகுறித்து தங்கள் பெற்றோர்களிடம் தைரியமாக பகிர வேண்டும். இல்லையென்றால் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கலாம் என பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அறிவுறுத்த தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தொலைக்காட்சி சீரியல்களில் இதுபோன்று தற்கொலை செய்து கொள்ளும்படியான காட்சிகளை காட்டுவது மிகவும் முட்டாள்தனமாக உள்ளது. மேலும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு புகாரளிக்க அரசு தொலைபேசி எண்களை கொடுத்துள்ளது. அதனை தொடர்பு கொண்டு பிரச்சினையை குறித்து மாணவி புகார் அளிப்பது போல காண்பித்து இருந்தால், படிக்கும் மாணவிகளுக்கு அது தைரியமளிக்கும் வகையில், முன் மாதிரியாக இருந்திருக்கும்.
மக்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்துக் கூறும் உரிமை ஊடகங்களுக்கு உள்ளது. இதுபோன்ற காட்சிகளை ஒளிபரப்புவது கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்துவதாக பொலிசார் தெரிவித்தனர்.