தனது மகளின் அறைக்குள் இரகசியமாக நுழைந்து தங்கியிருந்த, மகளின் காதலனான 19 வயது இளைஞனை வெட்டிக் கொன்றுவிட்டு, தந்தையொருவர் பொலிசில் சரணடைந்துள்ளார்.
கேரளாவின், திருவனந்தபுரம், பேட்டை சாயக்குடி லேனில் நேற்று (29) அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
அனீஷ் ஜார்ஜ் (19) என்பவரே கொல்லப்பட்டார்.
லால் சைமன் மத்திய கிழக்கு நாடொன்றில் பணிபுரிந்தார். அவர் ஒன்றரை வருடங்களின் முன் நாடு திரும்பினார். மனைவி, இரண்டு பிள்ளைகளுடன் “ஈடன்“ என்ற வீட்டில் வசித்து வருகிறார்.
16 வயதான மகள் வீட்டின் மாடி அறையில் தங்கியிருந்தார்.
மகளின் அறைக்குள் ஏதோ சத்தம் கேட்டு, அதிகாலை 4 மணியளவில் மேலே சென்ற தந்தை, கதவை தட்டியுள்ளார். எனினும், மகள் கதவை திறக்கவில்லை. இதையடுத்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றவர், அங்கு மகளுடன் தங்கியிருந்த இளைஞனை தாக்கியுள்ளார்.
அந்த அறைக்குள்ளிருந்த கழிவறைப் பக்கம் இளைஞன் தப்பியோடிய போது, அவரை விரட்டிச்சென்று, கழிவறைக்குள் வைத்து கத்தியால் வெட்டியுள்ளார்.
பின்னர், பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த தந்தை, மகளின் அறை கழிவறைக்குள் ஒருவரை வெட்டியுள்ளேன், உடனே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுங்கள் என கூறியுள்ளார்.
பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, இளைஞன் உயிரிழந்திருந்தார்.
அனீஷ் புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் காதலியின் வீட்டிற்கு வந்துள்ளார். 4 மணியளவில் கொலை நடந்தது. மகளின் அறையில் இருந்து சத்தம் கேட்டு, தந்தை சைமன் லால், கத்தியுடன் அங்கு வந்துள்ளார்.
பள்ளிமுக்கில் உள்ள புனித அன்னாள் தேவாலயத்தின் பாடகர் குழுவில் பிளஸ் வன் மாணவியான காதலி, காதலன் அனீஷ் ஆகியோர் இருந்தனர். அங்கு இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. கடந்த ஒரு வருடமாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
காதலியின் வீட்டு ஜன்னல் வழியாக நேற்று அதிகாலை அனீஷ் உள்நுழைந்துள்ளார்.
காதலி வீட்டிலிருந்து 800 மீற்றர்கள் தொலைவிலேயே அவரது வீடு உள்ளது. அண்மையில் விபத்தொன்றில் சிக்கிய அனீஷ், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, சில நாட்களின் முன்னர்தான் வீடு திரும்பியிருந்தார். பல நாட்கள் சந்திக்காத ஏக்கத்தில் தவித்த காதல் ஜோடி, இந்த விபரீத சந்திப்பை திட்டமிட்டுள்ளனர்.
பேட்டை காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்த தந்தை லால், அனீஷை திருடன் என்று தவறாக நினைத்து கத்தியால் வெட்டியதாக கூறினார். எனினும், அவரது கூற்றை நம்பவில்லை, மகளின் காதலன் என்பதை தெரிந்த பின்னரே வெட்டினார் என பொலிசார் தெரிவித்தனர்.
அனீஷின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு, அனீஷின் வீட்டிற்கு பொலிசார் சென்ற பின்னரே, நடந்த சம்பவத்தை பெற்றோர் அறிநதனர். அதுவரை, வீட்டு அறைக்குள் மகன் தூங்கிக் கொண்டிருப்பதாக பெற்றோர் நினைத்திருந்தனர்.




