13 வயது சிறுமியை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த இளைஞன் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், இன்னொரு 13 வயதான சிறுமியை கடத்திச் சென்றுள்ளார்.
திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியடிச்சோலை கிராமத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அந்த கிராமத்தை சேர்ந்த 13 வயதான பாடசாலை மாணவி ஒருவர் 07.12.2021 அன்று இரவு அக்கிராமத்தைச் சேர்ந்த செல்வநாயகம் உதயன் (வயது 24) என்பவரினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மூதூர் பொலிஸ் நிலையத்தில் 08.12.2021 அன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் 20 நாட்களுக்கு மேலாகியும் குறித்த சிறுமியை பொலிசார் இன்னமும் கண்டுபிடித்து தரவில்லை என பெற்றோர் கவலை வெளியிட்டு வருகின்றனர்.
சம்பவத்தில் கடத்தப்பட்ட சிறுமி கங்குவேலி அகத்தியர் வித்தியாலயத்தில் தரம் 8ல் கல்வி கற்றுவந்தார். இச்சிறுமியை கடத்தியதாக கூறப்படும் செல்வநாயகம் உதயன் என்பவர் கடந்த வருடம் 13 வயதான இன்னுமொரு சிறுமியை கடத்திச் சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு இவ்வருடம் பெப்ரவரி மாதம் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் இன்னுமொரு சிறுமியை கடத்திச் சென்றிருப்பது கிராம மக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.




