எரிவாயு வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட 8 பேர் கொண்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று மாலை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குழுவின் தலைவர் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பொல உள்ளிட்ட குழு உறுப்பினர்களால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அறிக்கையில் பல அவதானிப்புகள் மற்றும் முன்மொழிவுகள் உள்ளன.
பேராசிரியர் வல்பொல நேற்று கருத்து தெரிவித்தபோது எரிவாயு நிறுவனங்கள், இலங்கை தர நிர்ணய நிறுவன அதிகாரிகள் மற்றும் நுகர்வோர் உட்பட 40 தரப்பினரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
அண்மையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுகள், கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் ஏற்பட்ட எரிவாயு சிலிண்டர் தீ மற்றும் வெடிப்புகள் குறித்து ஆராய்ந்து அதற்கான காரணத்தை கண்டறிந்து சாத்தியமான தீர்வுகளை பரிந்துரைப்பதற்காக எட்டு பேர் கொண்ட குழுவை ஜனாதிபதி நவம்பர் 30 ஆம் திகதி நியமித்தார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஜித் டி சில்வா, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டபிள்யூ.டி.டபிள்யூ. ஜயதிலக்க, பேராசிரியர் பிரதீப் ஜயவீர, இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் நாராயண சிறிமுத்து, கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுதர்சன சோமசிறி மற்றும் சிரேஷ்ட பிரதிப் பணிப்பாளர் (தொழில்நுட்பம்) இலங்கை தரநிலை நிறுவகத்தின் சுஜீவ மஹாகம ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.