எம்பிலிபிட்டிய – பனாமுர பிரதேசத்தில் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உயிரிழந்தவரின் உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் இன்று பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டக்காரர்கள் பொலிசார் மீது கற்களை வீசியதாகவும் கூறப்படுகிறது.
போராட்டம் காரணமாக கொலன்ன – எம்பிலிபிட்டிய வீதியின் போக்குவரத்து தடைப்பட்டது. அந்த பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. வீதியின் குறுக்கே ரயர்கள் எரிக்கப்பட்டன.
இதேவேளை, இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே, இந்த மரணத்திற்கு அமைச்சர் சரத் வீரசேகரவே பொறுப்பு என தெரிவித்தார்.
நேற்று ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்திற்கு வந்தவரே பொலிசாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக குறிப்பிட்டு, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டது.
எனினும், இந்த குற்றச்சாட்டை பொதுமக்கள் பாதுகாப்ப இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர மறுத்தார்.
குறித்த நபர் நேற்றைய போராட்டம் காரணமாக கைது செய்யப்படவில்லை எனவும், அவருக்கு எதிராக குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட நிலையில், தடுப்புக்காவலில் இருந்த போது, மேல்சட்டையை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்ததாக குறிப்பிட்டார்.
உயிராபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
அவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும்,தானும் தனது மகளும் தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவரின் மனைவி பொலிஸாருக்கு முறையிட்டதையடுத்து, நேற்றிரவு 10.30 அளவில் கைது செய்யப்பட்டதாகவும், அவரது கைதிற்கும் ஐ.ம.ச போராட்டத்திற்கும் தொடர்பில்லையென்றும் தெரிவித்தார்.
உயிரிழந்தவர் பனாமுர வெலிபோத யாய பகுதியைச் சேர்ந்த இந்திக ஜயரத்ன (37) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் பனாமுர பொலிஸ் நிலையத்தின் இரண்டு உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தினால் இரண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எம்பிலிப்பிட்டிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவான் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.