ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றைய பேரணிக்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை தடுத்ததாகவும், தமது ஆதரவாளர் ஒருவரை பொலிசார் தாக்கி கொன்றதாகவும் குற்றம் சாட்டினர்.
தாங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்றைய தினம் கொழும்புக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை பொலிஸார் தடுத்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பனாமுரே பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொலைச் சம்பவத்திற்கு பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவே பொறுப்பு என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சரத் வீரசேகரவிற்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.
பனாமுரே பொலிஸ் நிலையத்திற்குள் சந்தேக நபரின் மரணம் தொடர்பான குற்றச்சாட்டை நிராகரித்த அமைச்சர் வீரசேகர, சந்தேகநபர் பொலிஸ் அறைக்குள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
“தன்னை தாக்கியதாக அவரது மகள் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைக்கு அடிமையான அவர், நேற்று இரவு 10.30 மணியளவில் கைது செய்யப்பட்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்திற்கும் அவரது கைதுக்கும் தொடர்பில்லை” என்று அவர் கூறினார்.