கொழும்பு கடற்பரப்பில் மூழ்கிய X-Press Pearl கப்பல் தொடர்பில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண உடனடியாக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பான பிரேரணையை கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க தெரிவித்தார்.
சில சட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் போதுமானதாக இல்லாததால், இந்த விஷயத்தை கையாள்வதற்கு ஒரு தெரிவுக் குழு தேவை என்று அவர் கூறினார்.
எதிர்காலத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்வதற்கான வழிகளை அடையாளம் காண்பதற்கு உரிய அனைத்து துறைகளின் நிபுணர்களும் தெரிவுக்குழுவில் சேர்க்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்கவின் கூற்றுக்கு பதிலளித்த துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, ஏற்றுமதி மையத்திற்குள் துறைமுகமாக இருப்பதால், உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் பல்வேறு நச்சுப் பொருட்கள் மற்றும் அபாயகரமான இரசாயனங்கள் அடங்கிய கப்பல்கள் வருவது சகஜம்.
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த போது நைட்ரிக் அமிலம் கொண்ட கொள்கலனில் கசிவு ஏற்பட்டதாக தெரிவித்த அமைச்சர் அபேகுணவர்தன, மே 20 ஆம் திகதி இரவு கப்பலில் தீப்பற்றியதாக கட்டுப்பாட்டு கோபுரத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
துறைமுக அதிகாரசபையின் தீயணைப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான தீயணைப்பு இழுவை படகுகள் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், அப்போது வானிலை சாதகமாக இல்லாததால் கப்பல் மூழ்கியதாகவும் அமைச்சர் கூறினார்.
விவாதத்தில் கலந்து கொண்ட நீதியமைச்சர் அலி சப்ரி, கப்பல் விபத்தின் விளைவாக இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆராய்வதற்காக ஏற்கனவே பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்றார்.
சுற்றுச்சூழல், மீனவ சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகளை கணக்கிடுவதற்கு சட்டக் குழுவும் இழப்பீட்டுக் குழுவும் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நீதியமைச்சில் கூடுவதாக அமைச்சர் கூறினார்.
சுற்றுச்சூழல் குழுவில் 41 உயர்மட்ட வல்லுநர்கள் தானாக முன்வந்து பணியாற்றுவதாக அமைச்சர் சப்ரி கூறினார்.




